தமது தயாரிப்புகளை அமெரிக்க அரசாங்க அமைப்புகள் வாங்குவதைத் தடை செய்யும் சட்டத்தை எதிர்த்து சீனாவின் ஹுவாவேய் நிறுவனம்,அமெரிக்காவில் வழக்கு தொடுத்துள்ளது.

அத்தகைய தடை அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என அறிவிக்கும்படி அது கேட்டுக்கொண்டுள்ளது. வழக்கில் முழு விசாரணையின்றி சுருக்கமான தீர்ப்பளிக்கும்படி கோரவிருப்பதாய் அது கூறியது.

ஹுவாவேய் நிறுவனம் தவறு செய்திருப்பதாகக் கூறும் அமெரிக்கச் சட்டம், அதன் மீது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம் அந்தத் தடை தொடர்பில் உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று ஹுவாவேய் கூறியது.

அமெரிக்கா, தடைசெய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் அதனை இணைத்துள்ளது. அதனால், ஹுவாவேய் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் முக்கியப் பாகங்களை அமெரிக்காவிடமிருந்து அது வாங்க இயலாது.

ஹுவாவேய் கருவிகள் மூலம் சீனா வேவுப் பணிகளில் ஈடுபடலாம் என்று குற்றஞ்சாட்டும் அமெரிக்கா, ஐந்தாம்-தலைமுறைக் கட்டமைப்பில் அதனைச் சேர்க்கவேண்டாம் என்று உலக நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.