அயோத்தி வழக்கு

அயோத்தி வழக்கில் சமரசக் குழுவின் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், ஓகஸ்ட் 6 ஆம் திகதி முதல் தினமும் உச்ச நீதிமன்றில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வு, இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

அதேசமயம், அயோத்தி வழக்கில் சம்மந்தப்பட்ட தரப்புகளிடையே பேச்சு நடத்தி, இணக்கமான தீர்வு காண்பதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது. ஆன்மிகவாதி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்தக்குழுவில் இடம்பிடித்திருந்தனர்.

இந்தக்குழு தங்களுடைய அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. இன்று அயோத்தி விவகாரம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தக்குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றம் படித்து பார்த்தது. அதில் அயோத்தி விவகாரத்தில் சமரசக் குழுவின் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என தகவல் என்று குறிப்பிட்டிருந்தது தெரியவந்தது.

அயோத்தி சமரசக் குழு தோல்வியடைந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் கருதுகிறது. இதனால் வருகிற 6ஆம் திகதியில் இருந்து தினமும் அயோத்தி வழக்கு விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார். இதனால் அயோத்தி விவகாரத்தில் விரைவில் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.