Sri Lanka 24 Hours Online Breaking News

அவனே ஸ்ரீமன் நாராயணா விமர்சனம்

0

கன்னடத்தில் கடந்த வாரம் டிசம்பர் 27-ஆம் திகதி ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’. அந்தத் திரைப்படம் இன்று(ஜனவரி 3) தமிழில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

புஷ்கர் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப்படம் அறிமுக இயக்குநர் சச்சின் ரவியின் இயக்கம் மற்றும் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
படத்தின் கதாநாயகன் ரக்‌ஷித் ஷெட்டி படத்திற்கான கதை எழுதிய ஆறு பேரில் ஒருவராகவும் இருக்கிறார். படத்தின் கதாநாயகியாக ஷான்வி ஸ்ரீ வத்சவா நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடக்கூடிய இந்தத் திரைப்படம் கொஞ்சம் காமெடி, அதை விடக் கொஞ்சம் அதிகமான ஆக்‌ஷன் மற்றும் மிக அதிகமான பிரம்மாண்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்களை சில இடங்களில் ஞாபகப்படுத்தியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அதே புதையல் தேடும் வேட்டையை இந்திய பாணியில் சொல்லியிருக்கிறார்கள்.

அமராவதி என்னும் ஊரில் அதி பயங்கரமான ஒரு கொள்ளைக் கூட்டத்தால் ஒரு புதையல் பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வருகிறது. அந்தப் புதையலை நாடக நடிகர்களான ஆறு பேர் கைப்பற்றி விடுகின்றனர். இதனை அறிந்த கொள்ளையர்கள் அவர்கள் அனைவரையும் கொலை செய்துவிடுகின்றனர்.

ஆனால் புதையல் இருக்கும் இடம் அவர்களுக்குத் தெரியாமலே போகிறது. திடீரெனக் கொள்ளைக் கூட்டத்தின் தலைவர் இறந்துவிட புதையலைக் கொண்டு வருபவரே அடுத்த தலைவர் என்று அறிவிக்கிறார்கள்.

அதன் காரணமாக கூட்டத் தலைவனின் இரு மகன்களுக்குள் சண்டை வருகிறது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக புதையலுக்கான தேடுதல் வேட்டை தொடர்கிறது. அந்த ஊரின் இன்ஸ்பெக்டராக வரும் நாராயணா(ரக்‌ஷித் ஷெட்டி), இந்த இரு வில்லன்களுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்.

ஒரு கட்டத்தில் தானே புதையலைத் தேடித் தருவதாகவும் சொல்கிறார். அதன் பின்னர் என்ன ஆனது, புதையல் கிடைத்ததா? வில்லன்களிடமிருந்து நாராயணா தப்பித்தாரா? என்பதாக அவனே ஸ்ரீமன் நாராயணா படத்தின் திரைக்கதை விரிகிறது.

ரஜினி முருகன்,ஆதித்ய வர்மா, கோ எனப் பல படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த அச்யுத் குமார் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். கதாநாயகன் கூடவே படம் முழுக்க வரும் அவர் ரசிக்கவைக்கிறார்.

மேலும் பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதனன் ராவ், கோபால கிருஷ்ணா என பலரும் தேர்ந்த நடிப்பால் பாராட்ட வைக்கின்றனர். வழக்கமான திரைப்படங்கள் போன்றே கதாநாயகிக்கு பெயரளவு முக்கியத்துவம் மட்டுமே இந்தப்படத்திலும் இருந்தது. ஆனால் குறைந்த காட்சிகளில் வந்தாலும் லெக்‌ஷ்மியாக ஷான்வி மனதில் நிற்கிறார்.

பொதுவாக டப்பிங் படங்களின் மிகப்பெரிய பலவீனமாக லிப் சிங்க் இருக்கும். இதன் காரணமாகவே பாடல் காட்சிகள் அன்னியமாகத் தெரிந்து சோர்வடையவும் வைக்கும். ஆனால் இந்தத் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் டீமை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

எந்த காட்சியின் தொய்விற்கும் டப்பிங் காரணமாக இருக்கவில்லை. புதையல் வேட்டை திரைப்படங்களில் கிடைக்கும் அத்தனை நல்ல அம்சங்களும் நமக்குக் கிடைத்தாலும் படத்தின் நீளம் பல இடங்களில் சோர்வையும், சலிப்பையும் ஏற்படுத்துகிறது.

முதல் பாதி வரையில் கதை, கதைக்குள் ஒரு கிளைக் கதை, சண்டை, மீண்டும் சண்டை என்று வெகு மெதுவாக நகரும் திரைக்கதை இடைவேளைக்குப் பின்னர் பல சுவாரஸ்யங்களைத் தருகிறது.

படத்தின் தொழில்நுட்பப் பிரிவினருக்கு சிறப்புப் பாராட்டுகளைக் கூறியாக வேண்டும். ஒவ்வொரு காட்சியிலும் நிறங்களால் ஒளிப்பதிவாளர் மாயம் செய்துள்ளார். இசை மற்றும் பின்னணி இசை இரண்டும் ரசிக்க வைக்கிறது. காட்சிகளின் அதிக நீளத்தைத் தவிர படத்தொகுப்பையும் குறை கூற இயலாது.

படத்தின் கலர் டோன் மற்றும் சிஜிக்காகவே படத்தைப் பொறுமையாகப் பார்க்கலாம். சூப்பர் ஹீரோ படங்கள் போன்று ஹீரோ செய்யும் லாஜிக்கற்ற சாகசங்கள் சிரிப்பூட்டுகிறது. முழுவதும் தீ எரிந்து இடிந்து கொண்டிருக்கும் கட்டிடத்தில் சாகசம் என்னும் பெயரில் ஹீரோ செய்யும் சேட்டைகள் எல்லாம் ரொம்ப ஓவர்.

கன்னட சினிமா ரசிகர்கள் பார்த்துப் பழக்கப்பட்ட இந்த மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. ஆனால் சீரியசான காட்சிகள் சிரிப்பை வரவழைத்தேனும் உற்சாகமூட்டும்.

மொத்தத்தில் மூன்று மணி நேரம் குடும்பத்துடன் சிரித்து பொழுதைக் கழிக்க அவனே ஸ்ரீமன் நாராயணா திரைப்படம் நல்ல வாய்ப்பாக இருக்கும்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like