ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஆண்மை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் கடத்தப்படும் கடல் அட்டைகள்

கடல் அட்டையை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகள் தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்தப்படுகின்றன.

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தியில் இருந்து கடல் அட்டைகள் உயிருடனும், பதப்படுத்தப்பட்ட நிலையிலும் இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த இருபது நாட்களில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான ஆறாயிரம் கிலோ கடல் அட்டைகளை மண்டபம் கடலோர காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடத்தல்காரர்களையும் கைது செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் அனைத்தும் நீதிமன்ற வழிகாட்டுதல்படி அழிக்கப்படும். உயிருடன் பறிமுதல் செய்யப்படும் கடல் அட்டைகள் மீண்டும் கடலில் விடப்படும்.

கடல் அட்டை

கடல் அட்டை பிடிக்க தடை

கடல் அட்டை, கடல் குதிரை, கடல் பசு, பால் சுறா மற்றும் சங்கு வகைகள் உள்ளிட்ட 53 வகையான கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2001 ஜுலை 11ம் தேதி தடை விதித்தது.

பின்னர், அதே ஆண்டு டிசம்பர் 5ம் திகதி அவற்றில் 23 கடல் பொருள்களுக்கான தடையை மத்திய அரசு நீக்கியது.

வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு

கடல் அட்டைகளுக்கு சீனா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அமோக வரவேற்பு உள்ளது.

இதனை அவர்கள் மருந்தாவும், உணவுப் பொருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தமிழக மீனவர்கள் கடல் அட்டைகளைச் சேகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர்.

தற்போது கடல் அட்டைகள் சேகரிப்பதற்கு தடை இருப்பதால் மீனவர்கள் இதனை பொருளாதார இழப்பாகப் பார்க்கின்றனர்.

கடந்த 18 ஆண்டு காலமாக கடல் அட்டை சேகரிக்க விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக் கோரி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என பலகட்டப் போராட்டங்கள் நடத்தினர். ஆனால் இந்தக் கோரிக்கையை இதுவரை அரசு ஏற்கவில்லை.

கடல் அட்டை

தமிழகத்தை விட்டுச் சென்ற மீனவர்கள்

பிபிசி தமிழிடம் பேசிய மண்டபம் பாரம்பரிய மீனவ சங்கத் தலைவர் ஜாகீர், “கடல் அட்டைகளைப் பிடிப்பதற்கு என தனியாக எந்த வலையும் கிடையாது. மீன் வலையில் இவை தானாகவே சிக்கிவிடும். வலையில் ஏறிய மறுகணமே இந்த அட்டைகளும் இறந்துவிடும்.

அவ்வாறு தவறுதலாக வலையில் சிக்கிக்கொள்ளும் கடல் அட்டைகளை, மீன்களுடன் கரைக்கு கொண்டு வந்தால்கூட மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதும், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிப்பதும் நடைமுறையில் உள்ளது.

இந்த அட்டைகளை வேண்டுமென்றே பிடித்தார்கள் என ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட அப்பாவி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரும், மத்திய அரசும் தமிழக மீனவர்களை பயங்கரவாதிகள் போன்று கையாள்கின்றனர். இதனால் கடல்அட்டை பிடிக்கும் மீனவர்கள் வருமானம் ஈட்ட அண்டை மாநிலங்களை நோக்கி பஞ்சம் பிழைக்க சென்று விட்டனர்” என்றார்.

தடையை நீக்காத அரசு

“பத்துக்கும் மேற்பட்ட கடல் அட்டை வகைகள் உள்ளன. ஆனால் நாங்கள் கருப்பு அட்டை, வெள்ளை அட்டை, சிவப்பு அட்டை என மூன்று வகையான அட்டைகளைப் பிடிப்பதற்குத்தான் அனுமதி கேட்கிறோம்.

கடல் அட்டை மீதான தடையை நீக்க பல்வேறு கட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்திவிட்டோம். ஆனால் எந்த அரசும் செவிசாய்க்கவில்லை” என்று பிபிசி தமிழிடம் கூறினார் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர் விஜயரூபன்.

ஆண்மை அதிகரிக்கும் என்று மூட நம்பிக்கை

மண்டபம் வனத்துறை அதிகாரி சதீஸ் பிபிசி தமிழியிடம் பேசியபோது, “ மன்னார் வளைகுடா கடல் பகுதியை பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் வைக்க கடல் அட்டையின் பங்கு மிக முக்கியமானது, கடலின் அடியிலுள்ள கழிவுகளை சப்பிட்டு கடலை சுத்தமாக வைப்பவை கடல் அட்டைகள்.

கடல் அட்டை சாப்பிடுவதால் ஆண்மை அதிகரிக்கும் என்று மக்கள் நம்புவது மூடநம்பிக்கை. இதுவரை அறிவியல் ரீதியாக இது நிருபிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

நன்றி: பீ.பீ.சி

Leave A Reply

Your email address will not be published.