Sri Lanka 24 Hours Online Breaking News

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை..! திக்..திக்.. நிமிடங்கள்

0

திருச்சி மணப்பாறை அருகே, ஆழ்துறை கிணற்றிள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி, 20 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது நடுக்காட்டுப்பட்டி கிராமம். வானம் பார்த்த பூமியான இங்கு, பெரும்பாலும், மானாவாரி பயிர்கள் தான் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரிட்டோ ஆரோக்கியராஜ்-கலா மேரி தம்பதி… இவர்களுக்கு, 5 வயதில் புனித் ரோஷன், 2 வயதில் சுர்ஜித் வில்சனும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதில், சுட்டித்தனம் மாறாத 2 வயது சுர்ஜித் வில்சன், நேற்று மாலை 5.30 மணியளவில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது, வீட்டை ஒட்டியுள்ள நிலத்தில், பயன்படுத்தாத நிலையில் இருந்த, 610 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையறிந்து அவனது பெற்றோர், குடும்பத்தினர் அலறி துடித்தனர்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டுவந்து, தங்களால் தெரிந்த அளவிற்கு, குழந்தையை மீட்க முயன்றனர். ஆனால், அவர்களின் மீட்பு முயற்சி தோல்வி அடைந்தது…

இதையடுத்து, மணப்பாறையிலிருந்து, விரைந்தோடி வந்த தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினரின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

முதலில், ஆழ்துளை கிணற்றுக்குள், வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டு, ஆக்சிஜன் செலுத்தப்பட்டது… இதனையடுத்து, ஆழ்துளை கிணற்றில், அதிதிறன் கொண்ட கேமிரா மூலம், 2 வயது பாலகன், சுர்ஜித் வில்சன் சிக்கியிருக்கும் இடம் கண்டறியப்பட்டது…

ஆழ்துளை கிணற்றிற்குள், கைகள் மேலே குவிந்தபடி, 2 வயது பாலகன், சுர்ஜித் வில்சனின் தலை தெரிந்தபோது, அனைவரும் துடித்துப் போயினர்.

குழந்தையின் கை சற்று அசைந்ததை கண்டு அனைவரும் சற்று ஆசுவாசமடைந்தனர். இதையடுத்து, திருச்சி உட்பட 4 மாவட்டங்களிலிருந்து, விரைந்தோடி வந்த மீட்பு குழுவினர், சிறுவனை மீட்பதற்கான, பணிகளை துரிதப்படுத்தினர்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மற்றும் வருவாய்துறையினர், தீயணைப்புத்துறை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் என, பல்வேறு துறைகளின் அதிகாரிகள், ஊழியர்கள், நிகழ்விடத்தில் குவிந்து, மீட்பு பணியைத் துரிதப்படுத்தினர்.

திருச்சியிலிருந்த அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜனும், வளர்மதியும், சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்… மாலை முடிந்து, இரவு தொடங்கு நேரத்தில், இருள் சூழத் தொடங்கியதால், நிகழ்விடத்தில், விளக்குகள் அமைக்கப்பட்டு, ஒளியூட்டப்பட்டது.

நேரம் கடந்து கொண்டே இருந்தபோதும், மீட்புக்குழுவினர், தொடர்ந்து தீவிர நம்பிக்கையுடன், மீட்பு குழுவினர் களமாடத் தொடங்கினர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் நிகழ்விடத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு வந்திருந்த மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள், முதலில் குழந்தையிடம் தன்னம்பிக்கை ஊட்டும்விதமாக பேசத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து, சுர்ஜித் வில்சனின் அப்பாவும், அம்மாவும் பேச வைக்கப்பட்டனர்.

தனது அம்மா பேசும்போது, அவரது குரலை கேட்டு, கையை அசைத்தான், சுர்ஜித் வில்சன்….. இதை கண்ட அனைவரும் நெகிழ்ந்துபோனதுடன், குழந்தை உயிரோடு இருப்பது கண்டு நெக்குருகினர்.

இதையடுத்து, ஏற்கனவே, ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள், சிறுவர்கள் விழுந்தால் அவர்களை மீட்பதற்காக, பிரத்யேக கருவியை தயாரித்துள்ள மதுரையைச் சேர்ந்த மணிகண்டன், வரவழைக்கப்பட்டார்.

தனது பிரத்யேக “ரெஸ்கியூ ரோபோ”வுடன், மதுரை மணிகண்டன் நிகழ்விடத்திற்கு வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டார். தலைக்கு மேலாக இருந்த குழந்தையின் கைகளில், சுருக்கு கயிற்றை மாட்டி, மேலே தூக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. கை ஒன்றில் சுருக்கு கயிறு மாட்டியபோது, பின்னர் அது உருவிக் கொண்டதால், அந்த முயற்சியும் தோல்வியடைந்தது. இதன்பிறகு, சுருக்கு கயிற்றை மாட்டுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் தோல்வியை தழுவின.

மதுரை மணிகண்டனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டேனியல் தனது குழுவினருடன் மீட்பு பணியில் ஈடுபட்டார். அவர்களின் முயற்சியும் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து நாமக்கல்லைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தயாரித்து, சென்னை ஐஐடி.யின் அங்கீகாரம் பெற்று மீட்பு கருவியைக் கொண்டு, மீட்பு பணி நடைபெற்றது.

சுமார் 15 கிலோ எடையுள்ள அந்த கருவியில், நவீன கேமிரா, ஆக்சிஜனை பரவலாக செலுத்தும் பிரிவு, மைக், ஸ்பீக்கர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த கருவியைக் கொண்டு, மிக கவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட பல மணி நேர முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.

அந்த தருணத்தில், ஆழ்துளை கிணற்றின் அருகே பள்ளம்தோண்டி, அதிலிருந்து பக்கவாட்டில், துளையிட்டு, குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது. அப்போது, ஏற்பட்ட அதிர்வால், 24 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை சுர்ஜித் வில்சன், திடீரென 32 அடிக்கு கீழே சரிந்தான்.. இருப்பினும், குழந்தை பாதுகாப்பை உணர்ந்து, பொக்லைன் எந்திரம் மூலம், பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்பட்டது.

மீட்பு பணி நள்ளிரவை கடந்திருந்தபோது, திடீரென ஆழ்துளை கிணற்றிற்குள், மண் சரிவு ஏற்பட்டதுடன், சிறுவன் கீழே சரியத் தொடங்கினான். படிப்படியாக நகர்ந்த குழந்தை சுர்ஜித் வில்சன், ஒருகட்டத்தில், 70 அடி ஆழத்திற்குச் சென்று சிக்கிக் கொண்டான்.

70 அடி ஆழத்திற்கு சென்று குழந்தை வில்சன் சிக்கிக் கொண்டபோது, அவனது தலையை மண் மூடியிருந்தது. முதலில் சற்று கலக்கமுற்ற மீட்புக்குழுவினர், பின்னர் சுதாரித்துக் கொண்டு, குழந்தையின் தலைமீதிருந்த மண்ணை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பெரியளவில் அது பலன் தரவில்லை. இருப்பினும், குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் குறைவின்றி தரப்பட்டது. மருத்துவர்கள் குழுவினர் குழந்தையிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாலை 5.30 மணி வரையில் குழந்தையின் குரல் கேட்க முடிந்ததாகவும், அதன்பிறகு, குழந்தையின் குரலை கேட்பதில் தேக்கம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

விடிய, விடிய நடைபெற்று வந்த மீட்பு பணி, காலையில், பொழுதுவிடிந்ததும் சற்று வேகமெடுத்தது. மீட்பு பணி, 17 மணி நேரத்தை கடந்த நிலையில், காலை 11 மணியளவில், குழந்தை அசைவின்றி இருப்பதாக தகவல் வெளியானது. இருப்பினும், மீட்பு தொய்வின்றி தொடர்ந்தது.

போர்வெல் அருகே பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, எவ்வாறு குழந்தையை மீட்பது என்பது பற்றி, சென்னை மெட்ரோ ரயில் பொறியாளர்கள் குழுவினரிடம், ஆலோசனை கேட்கப்பட்டு, அதன்படி, மீட்பு பணிகள் தொடர்ந்தன.

நெய்வேலியிலிருந்து, என்.எல்.சி நிலக்கரி சுரங்க மீட்புக்குழுவினரும், அதிநவீன மீட்புக் கருவிகளுடன், நிகழ்விடத்திற்கு வந்தனர். மேலும், அரக்கோணத்திலிருந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினரும், சென்னையிலிருந்து, மாநில பேரிடர் மீட்பு படையினரும், நிகழ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

வானம் பார்த்த பூமியாக இருப்பதால், 5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆழ்துளை கிணற்றை அமைத்துள்ளனர். 610 அடி ஆழத்திற்கு போர் இறக்கியும், தண்ணீர் இல்லாததால், அந்த போர்வெல்-ஐ அப்படியே விட்டுள்ளனர். அண்மையில், அந்த போர்வெல் அருகே சோளப் பயிர் சாகுபடியையொட்டி, சோளம் தெளித்துள்ளனர். பின்னர், மழை பெய்ததால், அந்த 610 அடி ஆழ ஆழ்துளை கிணறும் சற்று பள்ளமாகி இருந்துள்ளது.

அந்த ஆழ்துளை கிணற்றைச் சுற்றிலும் சோளப் பயிர் முளைத்திருந்ததால், அங்கு போர்வெல் இருப்பதை, குழந்தை அறிந்திருக்கவில்லை. ஆழ்துளை கிணறு இருப்பது தெரியாமல் அப்பகுதிக்குச் சென்ற நிலையில், குழந்தை சுர்ஜித் வில்சன் தவறி விழுந்துள்ளதாக, அவனது உறவினர்கள் கூறியுள்ளனர்.

சுர்ஜித் மயக்கத்தில் இருக்கலாம்… உடல் வெப்பநிலையை ரோபோ பதிவு செய்துள்ளது

குழந்தையை மீட்கும் பணி, 20 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பகல் 12 மணியளவில், லேசான சாரல் மழை பதிவானது.

இதையடுத்து, குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணறு பகுதியின் மேற்புறம், பிளாஸ்டிக் தார்பாயில் ஆன கூடாரம் போடப்பட்டு, மீட்பு பணி தொடர்ந்து வருகிறது. தற்போது, மழை நின்றுவிட்ட நிலையில், மீட்பு குழுவினரின் மீட்பு பணி தீவிரமடைந்திருக்கிறது.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App | Facebook | Twitter | Instagram

Get real time updates directly on you device, subscribe now.

You might also like