Sri Lanka 24 Hours Online Breaking News

இந்திய அணியைப் பதம் பார்க்கும் காயங்கள்

0

நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவிருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டிருந்த பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா அந்தப் போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, ஷிகர் தவானுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டிருக்க, இப்போது இஷாந்துக்குப் பதிலாக யாரை அனுப்புவது என்ற குழப்பத்தில் அமர்ந்திருக்கிறது பிசிசிஐ.

டெல்லியின் ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் ரஞ்சிப் போட்டியில் டெல்லி அணியும், விதர்பா அணியும் மோதின.

அதில், முதலில் துடுப்பெடுத்தாடிய விதர்பா அணி 179 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனை சேஸ் செய்த டெல்லி அணி 16 ரன்கள் லீடிங்குடன் முதல் இன்னிங்ஸை முடிக்க, இரண்டாவது இன்னிங்ஸ் முக்கியமான கட்டத்துக்குள் நுழைந்தது.

இதில் பவுலர்களின் சிறப்பான செயல்பாடு அணியின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதால், ஒவ்வொரு பவுலரும் அவர்களது சக்திக்கு மீறி செயல்பட்டனர். அப்படி பந்து வீசிவிட்டு உடனடியாக LBW விக்கெட் கேட்க திரும்பியபோது, இஷாந்த் ஷர்மாவின் காலில் சுளுக்கு ஏற்பட்டது.

மைதானத்திலேயே வீக்கம் தெரிய தொடங்கியதால், அப்போது டிரஸ்ஸிங் ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் இஷாந்த். நியூசிலாந்து அணியுடன் விளையாடவிருப்பதால் உடனடி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது இஷாந்தின் காலில் ஏற்பட்டுள்ள வீக்கம் பெரிதாகிக்கொண்டே வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால், எலும்பு முறிவு ஏற்படவில்லை எனக் கூறியிருப்பதால் இஷாந்த் சரியாகிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது பிசிசிஐ. ரஞ்சிக் கோப்பை போட்டியை முடித்துக்கொண்டு, பிப்ரவரி 6ஆம் திகதி தான் இஷாந்த் ஷர்மா நியூசிலாந்துக்குப் பயணமாவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஷிகர் தவானும் காயம் காரணமாக, நியூசிலாந்துக்குக் கிளம்பிச் சென்ற இந்திய அணியில் இடம்பெறவில்லை.

ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது, பந்தைப் பிடிக்க எகிறிய ஷிகர் தவானின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

அவரை MRI ஸ்கேனுக்கு உட்படுத்திப் பார்த்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதியானதால் நியூசிலாந்துடன் விளையாடும் இந்திய அணியிலிருந்து அவரை நீக்கிவிட்டனர்.

ஆனால், அவருக்குப் பதிலாக வேறு வீரர்கள் யாரையும் இந்திய அணியுடன் அனுப்பவில்லை. ஏற்கனவே, நியூசிலாந்துக்குப் பயணமாகி மாதிரி போட்டிகளில் விளையாடிக்கொண்டிருக்கும் இந்தியா A அணியில் இடம்பெற்றுள்ள மயங்க் அகர்வால், ஷிகர் தவானுக்குப் பதிலாக விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019ஆம் ஆண்டின் இறுதியில் ஷிகர் தவான் காயம் காரணமாக ஓய்வெடுத்தபோது, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வால் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like