Sri Lanka 24 Hours Online Breaking News

இரவில் மூடப்படும் தருமபுரம் வைத்தியசாலை -பொதுமக்கள் குற்றச்சாட்டு,

0

கிளிநொச்சியின் கண்டாவளைப் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பிரதேசம் ஆகியவற்றினைச் சேர்ந்த மக்களது பிரதான சிகிச்சை மையமான தருமபுரம் வைத்தியசாலையானது இரவு வேளைகளில் உத்தியோகப்பற்றற்ற வகையில் மூடப்படுவதாக பிரதேசப் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இரவு வேளைகளில் அவரச சிகிச்சைகளுக்காகச் செல்லும் நோயாளர்கள் மறுநாள் காலை ஆறு மணிக்கு வருமாறும் அவசரம் எனில் நேரடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குச் செல்லுமாறும் பணிக்கப்படுகின்றனர்.

அதையும் மீறி தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்க கோரும் நோயாளிகள் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டாலும் அவர்கள் வைத்தியர்களால் மறுநாள் காலையிலேயே பார்வையிடப்படுகின்றனர் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் மயில்வாகனபுரத்திலிருந்து இரத்த வாந்தியுடன் இரவு பத்து மணியளவில் தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட பதினெட்டு வயது இளைஞன் ஒருவர், மறுநாள் காலை ஆறுமணியளவிலேயே வைத்தியர் ஒருவரால் பார்வையிடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வெளிநோயாளர் பிரிவிற்கு வருகைதரும் நோயாளர்களை வைத்தியர்கள் சரியாக பார்வையிடுவதில்லை எனவும் நோயாளி நோயை கூறுவதற்கு முன்பாகவே வைத்தியர் மருந்துச்சிட்டையை வழங்குவதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், இரண்டு வைத்தியர்கள் கடமையாற்றும் இவ்வைத்தியசாலையில் அவர்களுக்கு மேலதிகமாக ஓய்வு பெற்று ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வைத்தியரிடம் சிகிச்சை பெறவே அனேக நோயாளர்கள் விரும்புவதாக பெயர் குறிப்பிட விரும்பாத நோயாளி ஒருவர் தெரிவித்தார்.

இடம்பெயர்விற்கு முன்னரும் பின்னரும் ஒரு வைத்தியருடன் இயங்கிய காலப்பகுதிகளில் கூட இருபத்து நான்கு மணிநேரமும் வைத்தியரால் நோயாளிகள் பார்வையிடப்பட்ட இந்த வைத்தியசாலையில்இ தற்போது இரண்டு வைத்தியர்கள் பணியாற்றும் நிலையில் கடந்த ஒரு வருடகாலமாகத் தமக்கு இவ்வாறு அநீதி இழைக்கப்படுவது குறித்துப் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாத்தார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவன் அவர்களிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்து விடயம் தொடர்பில் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாவும் இதனையடுத்து தான் உடனடியாக தர்மபுரம் வைத்தியாலைக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்து உரிய மக்களின் குற்றசாட்டுகள் தொடர்பில் அவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், பொதுமக்கள் இனி வழமைபோன்று வைத்தியசாலை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like