Latest news from around the world

‘இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளது’

இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் உயிர் தியாகமுமே அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முகங்கொடுத்திருக்கும் பயங்கரவாத சவாலை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்து நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்குரிய ஆற்றல் எமது இராணுவத்தினரிடம் காணப்படுவதாக முப்படைகளின் தலைவர் என்ற வகையில் தான் உறுதியாக நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற “இராணுவத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும்” பத்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தாய் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் நாட்டின் ஆட்புல எல்லையை பாதுகாப்பதற்காகவும் உயிர்த் தியாகம் செய்த, காணாமல்போன மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினரை நினைவுகூர்ந்து ஸ்ரீ ஜயவர்தனபுர நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய இராணுவ நினைவுத் தூபி முன்னிலையில் நினைவு தின கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்றன.

முப்பது வருடகால கொடிய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்த வெற்றியை அடைந்து பத்து வருடங்கள் நிறைவுபெறும் இந்த சந்தர்ப்பத்தில், அதற்கு முற்றிலும் வேறுபட்ட சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிர்பாராத வகையில் முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.