சமையல் குறிப்பு

இறால் தம் பிரியாணி

தமிழ் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த முக்கியமான பகுதி உணவு. விருந்தோம்பலுக்கு நற்பெயர் பெற்ற தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற ஒவ்வோர் உணவு வகை இருக்கிறது.

இந்திய உணவு வகைகளில், தென்னிந்திய உணவு வகைகளுக்கு நிச்சயம் தனி இடம் உண்டு. இனிப்பு முதல் துவர்ப்பு வரை அறுசுவையையும் அளவாக உணவில் சேர்த்து அன்போடு பரிமாறப்படும் தமிழ்நாட்டு உணவுகளில், இறால் தம் பிரியாணிக்கு பாரம்பரியமும் தனியிடமும் உண்டு.

அப்படிப்பட்ட இறால் தம் பிரியாணியை வீட்டிலேயே செய்து விருந்து படையுங்கள்.

என்ன தேவை?

பாஸ்மதி அரிசி – அரை கிலோ

இறால் – அரை கிலோ

வெங்காயம் – 2

புதினா – கொத்தமல்லி இலைகள் – 2 கைப்பிடி அளவு

தயிர் – கால் கப்

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 2

குங்குமப்பூ – 2 சிட்டிகை

மிளகாய்த்தூள் – இரண்டரை டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) – 4 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்

பட்டை – 2 துண்டு

கிராம்பு – 4

ஏலக்காய் – 5

அன்னாசிப்பூ – 4

பிரியாணி இலை – 4

நெய் – 3 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

உப்பு – 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

இறாலை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து, 15 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைக் கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். சிறிதளவு கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைத் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி பாதியளவு பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொதித்தபின் சுத்தம் செய்த அரிசியைச் சேர்த்து, முக்கால் பதத்துக்கு வேகவிடவும். வெந்தபின் தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் நெய், எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும், மீதமுள்ள பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து வதக்கவும்.

குங்குமப்பூவை வெதுவெதுப்பான நீரில் ஊறவிடவும். வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கிக்கொள்ளவும். அதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலைகள் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

மீண்டும் அதில் தக்காளி, மீதமுள்ள மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பின்னர் தயிர் சேர்த்து, ஒரு கப் தண்ணீர்விட்டு நன்கு கொதிக்க விடவும்.

கொதித்தபின் இறால் துண்டுகளைச் சேர்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்கவிடவும். அதன் மேல் வடித்த சாதத்தை மெத்தை போன்று விரித்து, சிறிதளவு கொத்தமல்லி, புதினா இலைகளை மேலே தூவிவிடவும்.

அதனுடன் ஊறவைத்த குங்குமப்பூவை மசித்து, அந்த தண்ணீருடன் சேர்த்து சாதத்தின் மேலே ஊற்றி, காற்று வெளியேறாதவாறு மூடியிடவும். 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும். வெந்தபின் மெதுவாக பிரியாணியைக் கிளறிவிடவும். இறால் பிரியாணி ரெடி.

சிறப்பு

ஒமேகா 3-எஸ் என்ற ‘நல்ல கொழுப்பு’ அதிகமாகவும், பிற கடல் உணவு வகைகளில் அதிகம் காணப்படும் கந்தகம் குறைவாகவும் கொண்டது இறால்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close