Sri Lanka 24 Hours Online Breaking News

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா மகாமுனி?

0

‘மௌனகுரு’ சாந்தகுமாரின் அடுத்த திரைப்படம், ஆர்யாவின் மாறுபட்ட தோற்றம், முன்னோட்ட காட்சிகள் என ‘மகாமுனி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் குவிய படம் நேற்று வெளியானது.

சிறைச்சாலையில் மன அழுத்தமுடைய கைதிகளின் நடுவே ஆர்யா இருக்கும் காட்சியிலிருந்து தொடங்குகிறது படம். தொடர்ந்து இருவிதமான ஆர்யாவின் கதை துண்டுதுண்டாக சொல்லப்படுகிறது. அரசியல்வாதி இளவரசுக்கு பகுதி நேரமாக கொலை, ஆள்கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட திட்டம் வகுத்து கொடுக்கும் ஆர்யா (மகா), கார் ஓட்டுநர் தொழில் செய்து மனைவி இந்துஜா, மகனுடன் வாழ்கிறார். மற்றொருபுரம், ஈரோடு மாவட்டத்தில் ஒரு மலையடிவார கிராமத்தில் தாய் ரோகிணியுடன் இருக்கும் ஆர்யா (முனி) இயற்கை விவசாயம், பள்ளிகள் எட்டாத மலைகிராமத்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது என மகிழ்வுடன் இருக்கும் காட்சிகள் வருகின்றன.

மனைவி இந்துஜா, மகனுடன் வாழும் மகாவுக்கு நெருக்கடி உருவாகிறது. அதிலிருந்து விடுபட்டு மனைவி, குழந்தையுடன் அமைதியான வாழ்க்கைக்கு செல்லும் முயற்சியோடு போராடுகிறார் மகா. புத்தக வாசிப்பு, விவேகானந்தர் வழியில் பிரம்மச்சரியம் என இருக்கும் முனிக்கு பணக்கார பெண் மஹிமா நம்பியாருடன் நட்புடன் பழகும் சூழல் ஏற்படுகிறது. இதனால் சாதிய ரீதியான பிரச்சனைகளை சந்திக்கிறார் முனி. இந்த இரண்டு ஆர்யாக்களின் காட்சிகளால் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதையில் இவர்கள் இருவரும் வெவ்வேறு நபர்களா? ஒரே ஆர்யாவின் இருவித வாழ்க்கையா என்பது இரண்டாம் பாதியில் தெரிகிறது. பிறகு அவர்களது வாழ்க்கை எதிர்பாராத சம்பவங்களால் எப்படி திசை மாறியது என்பதை நேர்த்தியான திரைக்கதையின் மூலம் சொல்கிறது மகாமுனி.

பிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்

பல காட்சிகளில் மஹிமா நம்பியார் இயல்பாகவே அசத்தியிருக்கிறார். இந்துஜாவின் நடிப்பும் பாராட்டும்படி உள்ளது. இளவரசு, ஜி.எம். குமார், ஜெயக்குமார் என அனைவரது பாத்திரவார்ப்பிலும் சாந்தகுமாரின் உழைப்பு வெளிப்படுகிறது.

நகரத்தில் ஆக்‌ஷன் காட்சிகளிலும், மனைவி குழந்தையுடன் வசிக்கும் ஆர்யாவின் வீட்டுக்குள் நிகழும் காட்சியின் ஒளியிலும், மலையடிவார கிராமத்தின் ரம்மியத்தை காட்டுவதிலும் ஒளிப்பதிவாளர் அருண் பத்பநாபனின் ஒளிப்பதிவு சிறப்பு. அதிலும் இயற்கை காட்சிகள் அதன் வசீகரத்தில் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. பின்னணி இசையில் ஈர்த்திருக்கிறார் தமன்.

குழந்தையுடன் விபத்தில் பலியான இசையமைப்பாளர்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை

சிக்கல்களும், பிரச்சனைகளும் பிணைந்த வாழ்க்கையிலிருந்து எதிர்நீச்சல் போடும் ஆர்யாவின் காட்சியோடு நிறைவுபெறும் மகாமுனி, திரில்லிங் அனுபவத்தோடு பலவிதமான மனித போராட்டங்களையும் உணர்த்தி நிறைவளிக்கிறது.

ஆர்யாவை நல்ல நடிகராக மறுகண்டுபிடிப்பு நிகழ்த்தியிருக்கிறார் சாந்தகுமார். கதைக்களத்தில் பெரிய அளவில் புதுமை இல்லை என்றாலும் பேசப்பட்டிருக்கும் மனிதர்களின் வாழ்வு, கதாபத்திர வடிவம், சம்பவங்கள் போன்றவற்றில் புதுவாசம் தருகிறது இந்த படம். அரசியல்வாதிகளின் நலனுக்காக பணையம் வைக்கப்படும் சாமானியன் வாழ்க்கையை சாந்தகுமார் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். அதேபோல் சாதிய பாகுபாட்டை, ஆணவ கொலை முயற்சியையும் இப்படம் நுட்பமாக சொல்லியிருக்கிறது.

ஆர்யாவால் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்

இவற்றோடு சிந்திக்க தூண்டும் வசனங்கள் அவ்வப்போது இடம்பெற்று திரையரங்கில் ரசிகர்களின் கைத்தட்டலைப் பெறுகின்றன. வித்தியாசமான கதைசொல்லல் முறையில் கதாபாத்திரத்தின் அசைவுகள், உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் இயக்குநர் சாந்தகுமாரின் தனித்தன்மையும், மெனக்கெடலும் பளிச்சிடுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like