Sri Lanka 24 Hours Online Breaking News

கடந்த 40 ஆண்டுகளில் ஏவுகணையால் வீழ்த்தப்பட்ட விமானங்கள்

0

ஈரானில் அண்மையில் விபத்துக்குள்ளான உக்ரேனிய விமானம், ஈரானிய ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் விமான விபத்து குறித்துச் சந்தேகம் இருப்பதாய்க் கூறியுள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளில் சில விமானங்கள் ஏவுகணைத் தாக்குதலால் வீழ்த்தப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பற்றிய ஒரு பார்வை…..

நாள்: 17 ஜூலை 2014
இடம்: உக்ரேன்
மாண்டோர் எண்ணிக்கை: 298
விமானம்: போயிங் 777 (மலேசியன் ஏர்லைன்ஸ் MH17)

கோலாலம்பூரிலிருந்து ஆம்ஸ்டர்டாம் சென்றுகொண்டிருந்த விமானம் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள உக்ரேனின் கிழக்குப் பகுதியில் ஏவுகணையால் வீழ்த்தப்பட்டது.

கிழக்கு உக்ரேனை வசப்படுத்த விரும்பும் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களும் உக்ரேனிய அதிகாரிகளும் விமானம் வீழ்த்தப்பட்டதன் தொடர்பில் ஒருவரை ஒருவர் குறைகூறிவருகின்றனர்.

நாள்: 23 மார்ச் 2007

இடம்: சோமாலியா
மாண்டோர் எண்ணிக்கை: 11
விமானம்: இல்யூஷின் IL-76 (பெலரூசிய விமான நிறுவனம்)

சோமாலியத் தலைநகர் மொகாடிஷுவிலிருந்து (Mogadishu) புறப்பட்ட சற்று நேரத்தில் அந்த விமானம் எறிகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அதில் பெலரூசியாவைச் சேர்ந்த தொழில்நுட்பர்களும், பொறியாளர்களும் இருந்தனர்.

நாள்: 4 அக்டோபர் 2001
இடம்: கருங்கடல்
மாண்டோர் எண்ணிக்கை: 78
விமானம்: சிபிர் டுப்போலெவ்-154 (ரஷ்ய நிறுவனம்)

இஸ்ரேலின் டெல் அவீவ் (Tel Aviv) நகரிலிருந்து சைபீரியாவின் (Siberia) நோவோசிபிர்ஸ்க் (Novosibirsk) சென்றுகொண்டிருந்த விமானம் கருங்கடல் பகுதியில் வெடித்துச் சிதறியது.

சர்ச்சைக்குரிய கிரைமியா (Crimea) வட்டாரத்துக்கு மிக அருகில் அது நடந்தது. சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் தவறுதலாக ஏவுகணையைச் செலுத்தி விமானத்தை வீழ்த்தியதை உக்ரேன் ஒப்புக்கொண்டது.


நாள்: 3 ஜூலை 1988
இடம்: பாரசீக வளைகுடா
மாண்டோர் எண்ணிக்கை: 290
விமானம்: A-300 (ஈரான் ஏர் நிறுவனம்)

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) நகரிலிருந்து துபாய் சென்றுகொண்டிருந்த விமானம் பாரசீக வளைகுடாவில் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இரு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு வீழ்ந்தது.

ஹோர்முஸ் (Hormuz) நீரிணையில் செயல்பட்டுவந்த அமெரிக்கப் போர்க்கப்பலிலிருந்து அவை பாய்ச்சப்பட்டதாகக் கூறப்பட்டது. விமானத்தைப் போர்விமானம் என்று தவறாகப் புரிந்துகொண்டதை அமெரிக்கா ஒப்புக்கொண்டது.

நாள்: 1 செப்டம்பர் 1983
இடம்: சக்கலின் தீவு (Sakhalin)
மாண்டோர் எண்ணிக்கை: 269
விமானம்: போயிங் 747 (கொரியன் ஏர் நிறுவனம்)

தென் கொரிய விமானம் சகலின் தீவுக்கு மேல் பறந்துகொண்டிருந்தபோது அப்போதைய சோவியத் போர் விமானத்தால் தாக்கி வீழ்த்தப்பட்டது. 5 நாட்களுக்குப் பிறகு சோவியத் அதிகாரிகள் அதை ஒப்புக்கொண்டனர்.

நாள்: 21 பிப்ரவரி 1973
இடம்: சினாய்ப் பாலைவனம்
மாண்டோர் எண்ணிக்கை: 108
விமானம்: போயிங் 727 (லிபியன் அரேபிய விமான நிறுவனம்)

லிபியாவின் ட்ரிபோலி (Tripoli) நகரிலிருந்து, எகிப்தின் கைரோ (Cairo) சென்றுகொண்டிருந்த விமானம் சினாய்ப் பாலைவனத்தில் இஸ்ரேலியப் போர் விமானங்களின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.

சினாயில் உள்ள இஸ்ரேலிய ராணுவ முகாம்களுக்கு மேல் விமானம் பறந்துசென்றதாகவும், அது தரையிறங்க மறுத்ததால் அதை வீழ்த்த நேரிட்டதாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like