ஊடக அறம், உண்மையின் நிறம்!

சந்திராயன் -3 பணிகள் ஆரம்பித்துவிட்டன: கே.சிவன்

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கிவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் திகதி சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

செப்டம்பர் 7ஆம் திகதியன்று விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணி நடைபெற்றது.

தரையிறக்கத்தின் போது, 2.1 கிலோமீட்டர் தொலைவில் புவியுடனான தொலைத்தொடர்பை இழந்தது.

வெறும் 14 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் கொண்ட லேண்டரை தொடர்புகொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பெங்களூருவில் இன்று (ஜனவரி 1) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சந்திராயன் -3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது.

அதற்கான திட்டப் பணிகளை மேற்கொண்டுவருகிறோம். சந்திராயன்-2 திட்டத்தில் நாங்கள் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்.

வேகமாக சென்று நிலவின் மீது மோதியதால் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை. என்றாலும் கூட ஆர்பிட்டர் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

அது இன்னும் 7 ஆண்டுகளுக்கு தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கும்” என்று தெரிவித்தார்.

இரண்டாவது விண்வெளி ராக்கெட் ஏவுதளத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி ஆரம்பித்துவிட்டது. அது தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இருக்கும் என்று குறிப்பிட்ட சிவன், “விரைவில் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.