ஊடக அறம், உண்மையின் நிறம்!

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக இன்று (16) மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. ஐயப்பனை தரிசிப்பதற்காக பெண்கள் பலர் இணையத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களை அனுமதிக்கலாமா? அனுமதித்தால் கடந்த வருடத்தை போல பெரிய அளவில் பிரச்னை ஏற்படுமா? என்றெல்லாம் தேவசம் போர்டு அமைப்பினர், ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட அந்த ஆலோசனையில் சபரிமலைக்கு வரும் பெண்களிடம் பிரச்னைகளை எடுத்துக் கூறி, சமாதானப்படுத்தி திருப்பி அனுப்ப வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், சபரிமலைக்கு வரும் எந்தப் பெண்களுக்கும் மாநில அரசு பாதுகாப்பு வழங்காது என தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் முடிவுக்கு உட்பட்டது என்றாலும், சபரிமலைக்கு செல்லப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அனுமதி மறுப்பது நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அசம்பாவிதங்களை தடுக்க 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 10 முதல் 50 வயது வரையிலான பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுகள் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதே சமயம் பெண்களை அனுமதிக்க வேண்டும் என முந்தைய தீர்ப்புக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்ற உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடந்த ஆண்டு சபரிமலைக்கு கோயிலுக்கு பெண்கள் பலர் செல்ல முயன்றதால் போராட்டமும் பதற்றமும் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.