Sri Lanka 24 Hours Online Breaking News

சம்பளம் இல்லாமல் விளையாடுமா இந்தியா?

0

இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து ஐந்து டி20 போட்டிகளில் வெற்றிபெற்றது போலவே, தொடர்ந்து மூன்று போட்டிகளில் தாமதமாக பந்துவீசி ஹாட்-டிரிக் அபராதத்தை செலுத்தியிருக்கின்றனர்.

இப்போது சென்றுகொண்டிருக்கும் அபராத விகிதத்திலேயே சென்றால் இந்திய அணி முழுவதும் சம்பளம் இல்லாமலேயே விளையாடவேண்டிய சூழல் ஏற்படும்.

நியூசிலாந்துடன் இந்திய அணி விளையாடிய ஐந்து டி20 போட்டிகளில், கடைசி இரண்டு போட்டிகளில் தாமதமாக பந்து வீசி அபராதம் செலுத்தியது.

நான்காவது டி20 போட்டியில் ஒரு ஓவர் தாமதமாக வீசியதால், மொத்த சம்பளத்திலிருந்து 20 சதவிகித அபராதமும், ஐந்தாவது டி20 போட்டியில் இரண்டு ஓவர்கள் தாமதமாக வீசியதால் 40 சதவிகித அபராதமும் செலுத்தியது.

டி20 போட்டிகள் முடிவடைந்து நியூசிலாந்துடன் விளையாடிய முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது மட்டுமின்றி, நான்கு ஓவர்கள் வரை தாமதமாக வீசியிருந்தது.

இதனால், ஒரு ஓவருக்கு 20 சதவிகித அபராதம் எனக் கணக்கிட்டு மொத்தமாக 80 சதவிகித அபராதத்தை சம்பளத்திலிருந்து செலுத்தவேண்டும் என இந்திய அணிக்கு உத்தரவிட்டது ஐசிசி.

கோலி தலைமையில் களம் கண்டதால், இந்த உத்தரவை ஏற்றுக்கொள்வதாக கோலி அறிவித்தார். இதனடிப்படையில் 80 சதவிகித அபராதத்தை செலுத்தியிருக்கிறது இந்திய அணி.

இதே வேகத்தில் சென்றால் சனிக்கிழமை(நாளை) நியூசிலாந்துடன் விளையாடும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 ஓவர்கள் தாமதமாக வீசினால், மொத்த சம்பளத்தையும் அபராதமாக செலுத்தவேண்டியதிருக்கும்.

இது பணம் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தால் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் இந்திய அணிக்கு இது பெரிய தொந்தரவாக இருக்காது.

ஆனால், கேப்டன்ஷிப் சரியாக செயல்படாமல் ஓவர்களை தாமதப்படுத்துவதன் விளைவு என்பதால் அணியினரிடையே இருக்கும் புரிதலில் உளவியல் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு.

எனவே, இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெறுவது மட்டுமின்றி சரியான நேரத்துக்குள் பந்துவீசி முடிக்கவேண்டிய சூழலும் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like