Sri Lanka 24 Hours Online Breaking News

சர்ச்சைக்குரிய குடியுரிமை மசோதாவின் பின்னணியில் இருப்பது என்ன?

0

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியின் நிர்வாக அந்தஸ்தை மாற்றியதைத் தொடர்ந்து, பாஜக தலைமையிலான மத்திய அரசு, சர்ச்சைக்குரிய குடியுரிமை மசோதாவைக் கொண்டு வந்து, நாட்டின் வட கிழக்குப் பகுதியில் வாழும் மக்களின் உணர்வுகளை சோதித்துப் பார்க்க ஆயத்தமாகி உள்ளதாகத் தெரிகிறது.

வடகிழக்கு மாநிலங்களில், வரவேற்பு இல்லாத இந்த மசோதா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அருகாமை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க வகை செய்யும் வகையில் விதிகளைத் தளர்த்துவதாக உள்ளது.

இந்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் ஜனவரி 8 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு உருவாகி வன்முறைகள் வெடித்தன. அதன்பிறகு மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்படவில்லை. பிப்ரவரி மாதம் மக்களவையின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து இந்த மசோதா காலாவதியாகிவிட்டது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்ற தகவலை அடுத்து ஏற்கெனவே வடகிழக்குப் பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த மசோதா நாடு முழுவதற்கும் பொருந்தும் என்றாலும், – அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் போன்ற – வடகிழக்கு மாநிலங்களில் தான் அதிக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்கதேசத்துடன் இந்த மாநிலங்களின் எல்லைகள் இருப்பதால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து எளிதில் ஊடுருவக் கூடிய வகையில் அந்த எல்லைப் பகுதி அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் என – இரு தரப்பினரும் – சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வருவது கட்டுப்படுத்தப்படுவது இல்லை என்பதால், மாநில மக்களின் தனித்துவத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக இந்த மாநிலங்களைச் சேர்ந்த அமைப்புகளும், ஊடகங்களும் குரல் கொடுத்து வருகின்றன. இப்போதைய அரசு, இந்துக்களின் வாக்கு வங்கியை திருப்திப் படுத்தும் நோக்கில், சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள இந்துக்கள் இந்தியக் குடியுரிமை பெறலாம் என்று அனுமதிக்க முயற்சித்து வருகிறது.

நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என பட்டியல் வெளியான போதே, மாநிலங்களைச் சேர்ந்த அமைப்புகள் போராட்டங்களைத் தொடங்கிவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரை வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. இருந்தபோதிலும், “இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சித்தால் ஆளும் பாஜக பொது மக்களின் கடுமையான கோபத்துக்கு ஆளாக நேரிடும்” என்றும், கலவரங்கள் நடக்கலாம் என்றும் அசாம் மொழி தினசரி பத்திரிகையான அசாமியா கபோர் தனது தலையங்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றம்,இஸ்லாம்,காஷ்மீர்,முஸ்லிம்கள்,இந்தியா,வட கிழக்கு இந்தியா,இந்து மதம்,அஸ்ஸாம்

“மக்களுக்கு எதிராகச் செயல்படும் அரசுகளுக்கு என்ன கதி ஏற்படும் என்பதற்கு வரலாறு தான் சாட்சியாக உள்ளது” என்று அது எச்சரிக்கிறது.

வலதுசாரி ஆதரவு – தி பயனியர் – பத்திரிகை, நவம்பர் 18 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதியின் உருவ பொம்மையை அசாமில் போராட்டக்காரர்கள் எரித்ததாகச் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தப் பிராந்தியத்தில் செல்வாக்கு மிகுந்த எட்டு மாணவர் அமைப்புகளின் தலைமை அமைப்பான வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு (நெசோ), ஏழு மாநிலங்களிலும் நவம்பர் 18 ஆம் தேதி பெரிய போராட்டங்களைத் தொடங்கியது என்று அசாமிய மொழி தினசரி பத்திரிகையான அசாமியா பிரடிதின் கூறியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகையாக இது உள்ளது.

 

“எந்தச் சூழ்நிலையிலும் இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது” என்று நெசோ அமைப்பைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் கூறியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வடகிழக்கில் பெரியதாக உள்ள அசாம் மாநிலத்தில் நடந்த போராட்டங்களில், கிரிஷக் முக்தி சங்கம் சமிதி (கே.எம்.எஸ்.எஸ்.) என்ற விவசாயிகள் அமைப்பு, அசாம் ஜதியதபாடி யுவ சத்ரா பரிஷத் (ஏ.ஜே.ஒய்.சி.பி.) என்ற இளைஞர் அமைப்பு மற்றும் இடதுசாரி அரசியல் ஆதரவு கொண்ட இடது – ஜனநாயக மன்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன.

இரண்டு கட்ட குடியுரிமை நடவடிக்கை?

அரசின் குடியுரிமை உறுதி செய்யும் நடவடிக்கை இரண்டு கட்ட அணுகுமுறை அடிப்படையைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது – முதலாவதாக, முஸ்லிம் அல்லாத குடியேற்றவாசிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது. அடுத்தது சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை, பெரும்பாலும் முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது என அரசின் நடவடிக்கை இருக்கும் என்று தெரிகிறது.

குடியுரிமை தொடர்பாக இரண்டு வெவ்வேறான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள இருக்கிறது என்று நவம்பர் 20 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். குடியுரிமை மசோதா மற்றும் தேசியக் குடியுரிமைப் பதிவேடு என்ற நாடு தழுவிய அளவில் குடிமக்கள் கணக்கெடுப்பு, என நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியதாக ஆங்கில தினசரி பத்திரிகையான இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த “இந்து, சீக்கியர், புத்த மதத்தவர், ஜெயின் மதத்தவர், பார்சி மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு” குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்த மசோதா வகை செய்யும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

அங்கே “மதப் பாகுபாடு இருப்பதால் ” இவ்வாறு செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார். 1948 ஜூலை 19 ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்குள் வந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளை அடையாளம் கண்டு, வெளியேற்றுவதற்கு தேசியக் குடியுரிமைப் பதிவேடு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தில் தேசியக் குடியுரிமைப் பதிவேடு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. அதில் 1.9 மில்லியன் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. பெயர் விடுபட்டவர்கள், தங்களுடைய குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை சட்ட அமைப்புகளிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இருந்தபோதிலும், தேசிய அளவிலான தேசியக் குடியுரிமைப் பதிவேட்டிலும், மீண்டும் அசாம் மாநிலம் சேர்க்கப்படும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

தேசிய அளவிலான குடியுரிமைப் பதிவேடு தயாரிப்பதற்கு, தகுதி நாளாக 1948 ஜூலை 19 ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது என்றாலும், அசாமில் இதற்கான தகுதி நாளாக 1971 மார்ச் 24 ஆம் திகதி வரையறுக்கப் பட்டிருந்தது என்று ஸ்க்ரால் இணையதளம் தெரிவித்துள்ளது.

மக்கள் கருத்துக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட பாஜக ஏன் தயாராக உள்ளது?

வடகிழக்கு மாநிலங்களில் பரவலான போராட்டங்கள் உள்ள நிலையிலும், குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் பாஜக உறுதியாக உள்ளது. அந்தப் பகுதியில் கட்சிக்கு தேர்தலில் கிடைத்த வெற்றி தான் இதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.

‘சிமிட்டாங்காரன்’ பாடல் செய்த அடுத்த சாதனை

பாஜக அரசின் முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த மசோதாவை நிறைவேற்ற பாஜக முயற்சி செய்தபோது, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இருந்தபோதிலும், தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் 2019 தேர்தலைச் சந்தித்த பாஜக, அந்தப் பகுதியில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில், 18 இடங்களை வென்றுள்ளது என்று தி இந்து ஆங்கிலப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

பரவலாகப் போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும், குடியுரிமை விஷயத்தில் மாநில மக்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்கின்றனர் என்று அசாம் மாநில பாஜக தலைவர் ரஞ்சித் தாஸ், அசாமியா பிரடிதின் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

“குடியுரிமை திருத்த மசோதா குறித்து அசாம் மக்களிடம் அச்சம் குறைந்துவிட்டது. கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம், குடியுரிமை திருத்த மசோதா பற்றி தங்களுக்கு எந்த அச்சமும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்” என்று தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்துக்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத மற்றவர்களுக்கு எளிதாகக் குடியுரிமை அளிப்பதன் மூலம், பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை பாஜகவுக்கு உள்ளது.

“பெரும்பான்மை மக்களின் கட்சி என்ற தோற்றத்தை உறுதிப்படுத்த” இந்த மசோதா பாஜகவுக்கு உதவும் என்று தி வயர் என்ற ஆங்கில செய்தி இணையதளம் கருத்து தெரிவித்துள்ளது.

நன்றி – பீ.பீ.சி

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Get real time updates directly on you device, subscribe now.

You might also like