Sri Lanka 24 Hours Online Breaking News

சிசேரியன் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்ற பின்பு மீண்டெழுதல்

0

சிசேரியன் என்பது பெரிய அறுவை சிகிச்சை, மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே இதிலும் உங்கள் உடல் குணமடைய நேரம் தேவைப்படுகிறது.

சிசேரியனுக்குப் பிறகு இருக்கும் நேரம் புதிதாக தாய்மை அடைந்தவர்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சவாலாகவே இருக்கும்.

எனவே புதிதாக தாய்மை அடைந்த பெண்ணிற்கு அவளது வாழ்க்கை துணையும், குடும்பத்தினர்களும், நண்பர்களும், அன்னையர்களை ஊக்குவிக்கும் குழுக்களும் மற்றும் குழந்தை பேற்றிற்கு பிற்பட்ட காலத்தில் செவிலியர்களின் உதவி என அனைத்து விதத்திலும் உதவ வேண்டும்.

தையல் போடப்பட்ட இடம் விரைவில் குணமடைய உதவும் குறிப்புகள்:

வயிற்றில் தையல் போட்ட இடம், முதல் சில நாட்களுக்கு புண்ணாக இருக்கும். நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, அந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

தும்மல் அல்லது இருமல் வரும் போது, தையல் பிரிந்துவிடாமல் இருக்க வயிற்றை பிடித்துக் கொள்ளவும்.

தையல் போட்ட இடத்தை சுற்றிலும் இருக்கும் வலியில் இருந்து நிவாரணம் பெற, மசாஜ் செய்ய வெப்ப பட்டைகளை பயன்படுத்தலாம்.

அறுவை சிகிச்சை செய்த இடத்தில் நோய்த் தொற்றுகளுக்குரிய அறிகுறிகள் இருக்கிறதா என்று பரிசோதிக்கவும். அறுவை சிகிச்சை செய்த இடம் சிவப்பாக, வீக்கம் ஏற்பட்டு அல்லது அதிலிருந்து சுரப்புகள் எதுவும் வெளியேறினால் உங்களின் மருத்துவரிடம் கட்டாயமாக ஆலோசனை பெறவும்.

அதிகமான அளவு தண்ணீர் குடிக்கவும். இவை உங்கள் உடல்நலனை மீட்டெடுக்கவும் மற்றும் தாய்ப்பால் புகட்டுவதற்கும் உதவும்.
சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பின் தாய் பால் புகட்டுதல்:

மயக்க மருந்துகளின் தாக்கம், வலி மற்றும் சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகான மருத்துவமனை செயல்முறைகள், குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் புகட்டுவதில் சிரமத்தை ஏற்படுத்தலாம். எனவே குழந்தை பிறப்பைத் திட்டமிடும் போது, குழந்தை பிறந்த உடனே தாய்ப்பால் புகட்டுவதை பற்றி திட்டமிடுங்கள்.

சிசேரியன் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்திருந்தாலும், தாய்ப்பால் புகட்டுவதில் தேவையற்ற ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவும். பிறந்த குழந்தைக்கு செயற்கையாக பால் புகட்டுவதால் தாய்க்கு கவலை ஏற்படாமல் இருக்கவும், தாய்ப்பால் புகட்டுவதை பற்றியும் முன்னதாகவே திட்டமிடுங்கள்.

தாய்ப்பால் புகட்டுவதற்கான நிலைகள்:

நீங்கள் நேராக அமர்ந்து, முதுகுக்கு தேவையான, சரியான உறுதுணையை வைத்து பால் புகட்டும் போது, அதனால் ஏற்படும் முதுகு மற்றும் கழுத்து வலியை தவிர்க்க முடியும்.

உங்கள் வயிற்றுக்கு மேலே தலையணையை வைத்துக் கொள்வதால், தையல் போட்ட இடத்தில் அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

ஒரு பக்கமாக படுத்துக் கொண்டு பால் புகட்டுதல்: ஒரு பக்கமாக படுத்து கொண்டு உங்கள் குழந்தையை பார்த்து, உங்கள் குழந்தையையும் பக்கவாட்டில் உங்கள் மார்பகங்களை நோக்கி இருக்கும்படி செய்யவும். உங்கள் குழந்தையை ஒரு கையினால் தாங்கி, குழந்தையின் வாயில் மார்பகங்களை வைத்து, குழந்தையின் முதுகுக்கு பின்புறம் தலையணையை வைக்கவும். இதனால் குழந்தை உருண்டு விழுவதை தவிர்க்கலாம்.

கால்பந்து பிடி: உங்கள் முழங்கையை வளைத்து, உங்கள் பக்கத்தில் குழந்தையை பிடிக்கவும். உங்கள் உள்ளங்கையின் துணையினால் குழந்தையின் தலையை பிடித்து, உங்களின் முன்னங்கையை நோக்கி குழந்தையை பிடித்துக் கொள்ளவும். முன்னங்கையின் பின்புறமாக உங்கள் குழந்தையை கிடத்தவும்.

C- வடிவ தலையணையின் துணையினால், உங்கள் மார்பகத்தை மற்றொரு கையினால் பிடித்துக் கொள்ளவும். அந்தப் பக்கத்தில் மேலும் உங்கள் வசதிக்காக தலையணையை பயன்படுத்தலாம்.
சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகான உடற்பயிற்சிகள்:

ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள்:

உட்கார்ந்த நிலையில், ஆழமான வயிற்றுப் பகுதியில் இருந்து மூச்சை இழுத்து செய்யும் பயிற்சிகளை ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை செய்யலாம்.

2. இடுப்பு பகுதி உடற்பயிற்சிகள்:

சிசேரியனுக்கு பிறகு உங்களின் சிறுநீர் வடிகுழாய் அகற்றப்பட்ட பின்பு இடுப்பு பகுதி தசை பயிற்சிகளை செய்ய ஆரம்பிக்கலாம். இவை உங்களின் சிறுநீர்ப்பை மற்றும் குடல் பகுதியின் தசைகளை வலுப்படுத்தும்.

3. வயிற்றுப் பகுதி உடற்பயிற்சிகள்:

இந்த வகையான உடற்பயிற்சிகள் உங்கள் வயிற்றுப்பகுதியில் உள்ள தசைகளை வலுவூட்டும். இவை உங்களின் முதுகுத்தண்டை பாதுகாத்து, சரியான நிலையில் இருக்க உதவும். கடினமான வீட்டு வேலைகள், அதிதீவிர உடற்பயிற்சிகள், உட்கார்ந்து எழுதல், புஷ்-அப், வயிற்று உடற்பயிற்சிகள் அல்லது பிளாங்குகள், போன்றவைகள், டயாஸ்டேசிஸ் ரெக்டி-யை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதால், உடற்பயிற்சியை முதல் ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை தவிர்க்க வேண்டும்.

4. உடற்பயிற்சிகள்:

முதல் ஆறு முதல் எட்டு வாரங்கள் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதிக்கும் வரை, எந்தவிதமான உடற்பயிற்சிகளையும் தவிர்க்க வேண்டும். சிசேரியன் அறுவை சிகிச்சையில் இருந்து மீண்ட பிறகு, வலி ஏதும் இல்லாமல் இருத்தல் நிலை தான், மெதுவான தாக்கம் கொண்ட உடற்பயிற்சிகளான பிலேட்ஸ் உடற்பயிற்சிகள், யோகா, மெதுவாக ஓடுதல், மெதுவாக செய்யக்கூடிய ஜிம் உடற்பயிற்சிகள் போன்றவற்றை ஆரம்பிக்க சரியான தருணம்.

5. சிசேரியன் அறுவை சிகிச்சை செய்த 12 வாரத்திற்கு பின் உங்கள் உடல் நல நிபுணரின் ஒப்புதலுக்கு பிறகு, அதி தீவிர உடற்பயிற்சிகளான ஏரோபிக் உடற்பயிற்சிகள், ஓடுதல், பளு தூக்கும் உடற்பயிற்சிகள் மற்றும் அதிக நேரம் தாங்கி செய்ய கூடிய உடற்பயிற்சிகள் போன்றவற்றை ஆரம்பிக்கலாம்.

குழந்தை பிறந்த பின்பு ஏற்படும் மனநிலை மாற்றங்கள் மற்றும் மனச்சோர்வுகள்:

குழந்தை பிறந்த பின்பு சோகமாக இருத்தல் அல்லது அழுதல் என்பது இயல்பான ஒன்றுதான். இவை உடலின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தினால் உண்டாகும் நிலையாகும். இவற்றை குழந்தை பிறந்த பின்பு ஏற்படும் மனநிலை மாற்றம் என்று அழைக்கிறோம்.

இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இவை மாறி விட வேண்டும். ஆனால் எதிர்மறை உணர்வுகள் உங்களில் தொடர்ந்து கொண்டே இருந்தால், அல்லது புதிய அறிகுறிகள் ஏதாவது தோன்றினால் அவற்றிற்கு மகப்பேறுக்கு பின் ஏற்படும் மனச்சோர்வு காரணமாகும்.

மகப்பேற்றினால் ஏற்படும் மனச்சோர்வு உங்களுக்கு ஏற்பட்டால், ஆலோசனைகள் மற்றும் அறிவாற்றல் சார்ந்த நடத்தை சிகிச்சை முறைகள் உங்களுக்கு தேவைப்படலாம். தேவைப்பட்டால் உங்கள் மருத்துவர் உங்களுக்கு மருந்துகளை பரிந்துரை செய்வார். பெரும்பான்மையான பெண்கள் 3 முதல் 6 மாதத்தில் மகப்பேற்றினால் ஏற்படும் மனச்சோர்விலிருந்து மீண்டு விடுவார்கள்.

டாக்டர். கவிதா வெங்கடேசன், (குழந்தைப்பேறு பற்றி கற்பிப்பவர், பிரசவ அறை கண்காணிப்பாளர், தாய்ப்பால் ஆலோசகர்)

ஐஸ்வரியம் ஒருங்கிணைந்த மகப்பேறு மருத்துவமனை.

Disclaimer: The opinions expressed in this post are the personal views of the author. They do not necessarily reflect the views of COLOMBOTAMIL.LK. Any omissions or errors are the author’s and Momspresso does not assume any liability or responsibility for them.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like