சினிமாவிமர்சனம்

சைக்கோ விமர்சனம்

இருட்டான ஒரு பகுதியில் ஒரு லைட் மட்டும் எறியத் தொடங்க, கீழே ஒரு பெண்ணை கிடத்தி வைத்திருப்பது தெரியத் தொடங்குகிறது.

இறுக்கமாக கட்டி வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண் இருக்கும் ஒரு அறைக்குள் நுழையும் ஒருவன், அந்தப் பெண்ணின் தலையை மேலும் சாய்த்து, அருகிலிருக்கும் மேசை மீதிருந்த கத்தியால் ஒரே வெட்டாக வெட்ட கழுத்து மட்டும் பந்து போல உருண்டு ஓடுகிறது. வில்லன் அறிமுகம் முடிந்தது.

ஆள் அரவமற்ற ஒரு பகுதியில் விலையுயர்ந்த கார் ஒன்றில் உட்கார்ந்திருக்கும் பார்வையற்ற நபர் ஒருவர், ரேடியோ கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அவருக்கு குளோஸ்-அப் வரும் கேமரா, அங்கிருந்து ரேடியோ ஸ்டேஷனுக்கு பறக்கிறது. ‘கோவைப் பகுதியில் நடைபெற்று வரும் தொடர் கொலைகளுக்குக் காரணமான சைக்கோ மனிதனைப் பற்றிச் சொல்லுங்கள்’ என ரேடியோவில் பேசிய இனிமையான குரலுக்கு உரியவரிடம், மனநல ஆலோசகர் ஒருவர் பேசுகிறார்.

“கொலை செய்யும் பெண்களை அந்த நபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதில்லை. ஆனால், கழுத்தை மட்டும் வெட்டுகிறான் என்றால் தனது வேட்டையின் பரிசாக அந்தத் தலையை சேமித்து வைத்துக்கொள்கிறான் என்று பொருள்.

தனது வெற்றியின் கொண்டாட்டமாக, பெண்களின் உடலை பொதுவெளியில் வைத்து தனது இருப்பை நிலைநிறுத்துகிறான். எந்த வயதில், எப்படியிருந்தாலும் அந்த மனிதன் செய்யும் கொலைகளால் அவன் மிருகமாகிவிடுகிறான்” என்று மனநல ஆலோசகர் பேசி முடித்ததும், ரேடியோ தொகுப்பாளினியிடம் மாறுகிறது கேமரா.

அந்தத் தொகுப்பாளினி செல்லும் இடமெல்லாம் ஒருவன் அவரைப் பின் தொடர்கிறான். அவனுக்குக் கண் பார்வை இல்லை. எவ்வளவு முயன்றும் அவன் பின் தொடர்வதைத் தடுக்க முடியாமல் போக, அந்தத் தொகுப்பாளினியின் தோழி திருமணத்திலும் அவனைப் பார்க்க நேரிடுகிறது.

அங்கு இசைக் கலைஞனென பொய் சொல்லி வந்ததை கையும் களவுமாக பிடித்துக் கொடுத்ததும், கிட்டாரை வைத்துக்கொண்டு ஒரு பாட்டு பாடுகிறான். ஒரு நல்லவனை சந்தேகப்பட்டுவிட்டோமோ என்ற இரக்க குணத்தில் அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, என்னை பின் தொடர வேண்டாம் என்கிறார் அந்தத் தொகுப்பாளினி.

எங்கு சென்றாலும் வருவேன் என அந்த மனிதர் சொல்ல, நாளைக்கு நான் போகும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாது என்கிறார் தொகுப்பாளினி. நான் கண்டுபிடித்துவிட்டால், அடுத்த வாரம் வரும் உன் பிறந்தநாளுக்கு என்னை அழைக்கவேண்டும் என சவால் விடுகிறார்.

நாளை ரேடியோவில் எங்கே செல்கிறேன் என்பதற்கான க்ளூ கொடுக்கிறேன். முடிந்தால் கண்டுபிடி எனச் சொல்லி, அதேபோல சில க்ளூக்களையும் கொடுக்க, அந்த இடத்தை சரியாகக் கண்டுபிடித்துச் செல்கிறார் அந்த நபர். ஆனால், அங்கு சைக்கோ கொலைகாரனால் தொகுப்பாளினி கடத்தப்படுகிறார்.

பார்வையற்ற இவரால் அதைப் பார்க்க முடியவில்லை. காதலி கடத்தப்பட்டதை அறிந்ததும், காவல்துறைக்கு சொல்கிறார். ஆனால், காலம் கடந்துவிட்டது. கடத்தப்பட்ட தொகுப்பாளினியை சைக்கோ கொலைகாரன் கொன்றானா? பார்வையற்ற காதலன் தன் காதலியை எப்படி கண்டுபிடிக்கிறார்? இடையில் என்னவெல்லாம் நடக்கிறது? ஏன் இப்படிப்பட்ட கொலைகளை அவன் செய்கிறான்? என்பதெல்லாம் சைக்கோ படத்தின் திரைக்கதை.

இருபதுக்கும் மேற்பட்ட பெண்களை கோவை மாதிரியான நகரத்தில் ஒருவன் கடத்திக்கொண்டே இருக்கும்போது காவல்துறை பூப்பறித்ததா எனக் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக பாட்டு பாட வைத்திருக்கிறார் மிஷ்கின்.

காவல்துறை அதிகாரியாக வரும் இயக்குநர் ராம், விசாரணையின் போதெல்லாம் பாட்டு பாடிக்கொண்டே இருப்பது எரிச்சலின் உச்சம். பேசாமல் அவரைப் போட்டுத்தள்ளுவதிலிருந்து படத்தைத் தொடங்கியிருக்கலாமோ எனத் தோன்றுமளவுக்கு மனிதன் பாடாய் படுத்துகிறார்.

சரி, இவர் தான் பாட்டு பாடுகிறார். இத்தனை கொலைகள் நடைபெறுவதால் ஒவ்வொரு ஊரிலும், தெருவிலும் சிசிடிவி கேமரா வைத்திருக்கலாமே என்றால், ஒரே ஒரு சிசிடிவி கேமரா இருந்தாலும் சைக்கோ திரைப்படத்தின் கதையே அடிபட்டுப் போயிருக்கும். எனவே, அதனை உஷாராக மிஷ்கின் தவிர்த்துவிட்டார். பலே பலே.

சைக்கோ த்ரில்லர் வகையறா படங்களின் உயிர் எப்போதும், அதன் கடைசி 20 நிமிடங்களில் தான் அடங்கியிருக்கும். முதல் இரண்டு மணிநேரம் இயக்குநரின் மீதான நம்பிக்கையில் அமர்ந்திருக்கும் பார்வையாளன், கிளைமேக்ஸின் நேர்மையினால் தான் கொண்டாட்டத்துக்குத் தூண்டப்படுவான். ஆனால், இங்கு நடைபெற்றிருப்பது கருத்து திணிப்பு.

நாடு முழுவதும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் கொலை செய்யப்படும் நிகழ்வினால் பாதிப்படைந்து போயிருக்க, இப்படிப்பட்ட கொலைகளை செய்யும் ஒரு கொலைகாரனை குழந்தையுடன் ஒப்பிட்டு கொடுக்கப்பட்ட தீர்ப்பு மிஷ்கின் மீதான அவநம்பிக்கையை அதிகப்படுத்துகிறது.

இறந்துபோன பிணமாக இருந்தாலும், அதனை ஆடையின்றி பொதுவெளியில் வீசுவது பாலியல் வன்கொடுமைக்கு ஈடானது தான். அப்படிப்பட்ட கொடுமையை செய்தவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர் என்ற காரணத்தை முன்வைத்துவிட்டு, எந்தக் கொலைகளை வேண்டுமானாலும் செய்யலாம் என எந்த தர்க்கத்தின் அடிப்படையில் மிஷ்கின் நினைத்தாரோ தெரியவில்லை.

குழந்தையாகவே இருந்தாலும் அடுத்தவர்கள் உயிருக்கு ஆபத்து என்றால் அம்மன் கோயில் தீயில் போட்டு மிதி என்றும், கல்லறை சுடுகாட்டில் இருக்கும் சிலுவையின் மீது வைத்துக் கொல் என்றும் வா அருகில் வா, ஜென்ம நட்சத்திரம் ஆகிய படங்களில் பார்த்திருக்கிறோம். தமிழகம் அவற்றை வெற்றிபெற வைத்திருக்கிறது.

இப்படியெல்லாம் படம் எடுங்கள் என்று மிஷ்கினுக்கு அறிவுரை சொல்வது தவறு. ஆனால், இப்படியெல்லாம் காட்சியை வைத்து ரசிகர்களை ஏமாற்ற நினைப்பது ஏன் என்ற கேள்வியைக் கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதிலும், 18 கொலைகள் செய்த ஒருவனை 19ஆவதாக கடத்தபடும் ஒரு பெண் காப்பாற்றுவதை எந்த ரகத்தில் சேர்ப்பது.

நிர்பயா வழக்கு போல எண்ணற்ற வழக்குகளில் கைதானவர்களில் பலர், இல்லாத காரணங்களையெல்லாம் சொல்லி தங்களது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றங்களை நியாயப்படுத்துகின்றனர்.
அவற்றுக்கு எவ்வித ஆதரவும் கொடுக்காமல், ஒரு பெண்ணை கொலை செய்ததற்கான தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனக் கூறி ஒட்டுமொத்த நாடும் ஒரே பக்கமாக நிற்கிறது.

இந்த நேரத்தில் தான் மைனர் பையன். இன்னும் மேஜராகவில்லை எனக்கூறி தண்டனை குறைப்பு கேட்கிறார்கள். ஆனால், அதற்கெல்லாம் வழிவிடாமல் அரசியலமைப்பின் நான்கு தூண்களும் சமமாக நின்று நீதியை பெற்றுத்தரும் சமயத்தில், ‘அவன் ஒரு கொழந்தை சார். அவனையெல்லாம் அப்படியே போகவிட்றணும்’ என்று சொல்லுமளவுக்கு சமூக பொறுப்பற்ற தன்மை ஒரு கலைஞனிடம் இருக்கலாமா மிஸ்டர் மிஷ்கின்?

ஹைதராபாத் பெண் மருத்துவர் கடத்தி பாலியன் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகளின் பெற்றோர், ‘இவன் எனக்கு பிள்ளையா பொறக்காமலே இருந்திருக்கலாம்’ என்று கூறினார்கள். அதுபோலவே, சைக்கோ படத்தை எடுக்காமல் இருந்திருந்தால் மிஷ்கினின் மணிமகுடத்தில் ஒரு கரை படிந்திருக்காது.

கதையைத் தாண்டி வெளிப்பட்ட கேரக்டர்களில் முக்கியமானது நித்யா மேனன் மற்றும் சிங்கம் புலி. உதயநிதி இந்தப் படத்தை தயாரித்திருந்திருக்கலாம். அதிதி கண்களை விட்டு உணர்வுகளால் நடித்திருக்கலாம்.

ஒரு வேளை நிதியா மேனனின் அபாரமான நடிப்புத் திறனுடன் போட்டிபோடும் அளவுக்கு இவர்கள் வளரவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இளையராஜாவும், பீத்தோவனும் கலந்து செய்த கலவை என தன்னை வெளிப்படுத்திக்கொள்ள மிஷ்கின் முயன்றிருக்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close