ஊடக அறம், உண்மையின் நிறம்!

தீபாவளி லட்சுமி பூஜை எப்படி செய்ய வேண்டும்?

தீபாவளி பண்டிகை அன்று சகல ஐஸ்வர்யங்களை தரும் லட்சுமி தேவியை பூஜை செய்து உங்கள் வீட்டில் ஒளி எனும் செல்வங்களை பெற்று ம்கிழ்ச்சியுடன் வாழுங்கள்.

தீபாவளி = தீபம் +ஆவளி அதாவது தீபம் என்றால் விளக்கு என்றும் ஆவளி என்றால் வரிசை என்றும் பொருள். வீட்டில் வரிசையாக விளக்கை ஏற்றி நம் வீட்டில் உள்ள இருட்டை நீக்கவே வந்த கொண்டாட்டம் தான் இந்த தீபாவளி.

வீட்டில் உள்ள இருட்டை மட்டுமல்ல மனிதர்களின் உள்ளத்தில் படிந்துள்ள கோபம், பொறாமை, அகங்காரம், கவலை, துரோகம், வஞ்சம் போன்ற தீய எண்ணங்களின் இருட்டையும் எரித்து விட வேண்டும் என்பதே இந்த தீபாவளி பறைசாற்றுகிறது.

இந்த தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை முன் தினம் இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் கடவுள் அவதாரம் எடுத்து கொடுமை செய்யும் அசுரனை அளித்ததாக கூறுவது ஐதீகம்.

அதைப் பின்பற்றியே நம் முன்னோர்களும் நம் மனதில் எழும் அக இருள் விலக வேண்டும் என்று இதை கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த நாளில் இந்துக்கள் லட்சுமி குபேர பூஜை செய்வதை சிறப்பாக கருதுகின்றனர்.

இந்த நன்னாளில் செல்வ அதிபதியான லட்சுமி தேவி அனைவரின் வீட்டிலும் வாசம் செய்து நல்லிணக்கத்தையும் செழிப்பையும் தருகிறாள். இந்த லட்சுமி பூஜையை ஒவ்வொரு வரும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செய்து வந்தால் வீட்டில் சகல செல்வங்களும் நிலைக்கப் பெறும் என்பதாக கூறப்படுகிறது.

தீபாவளி பூஜையை உங்கள் வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை இங்கே காணலாம்.

வீட்டை சுத்தப்படுத்துங்கள்

தூய்மை இருக்கும் இடத்தில் தான் இறைவனின் வாசமும் வீசும். எனவே முதலில் பூஜை செய்வதற்கு முன் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையையும் நன்றாக துடைத்து சுத்தம் செய்து விடுங்கள். பிறகு கங்கா ஜலம் கொண்டு தெளியுங்கள். கங்கா ஜலம் இல்லாதவர்கள் பசு மாட்டுக் கோமியம் தெளிக்கலாம்.

பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுங்கள்

இப்பொழுது பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை நாம் செய்ய முயல வேண்டும். பூஜை அறையில் ஒரு சிவப்பு துணியை விரித்து அதில் மேஜை அல்லது பலகை ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடியளவு தானியங்களை அந்த பலகையின் மீது பரப்பி வைத்திடுங்கள்.

கலசம் தயார்ப்படுத்துங்கள்

இப்பொழுது ஒரு செம்பு குடம் அல்லது பித்தளை குடத்தை எடுத்து அதை நன்றாக கழுவி சுத்தம் செய்து விடுங்கள். அதன் மேல் நூலில் மஞ்சள் தடவி குடத்தில் சுத்துங்கள். அதனுள் 75 %அளவு தண்ணீர் நிரப்பு, ஒரு வெற்றிலை, ஒரு சாமந்தி பூ, ஒரு நாணயம், கொஞ்சம் அரசி போட்டு வைக்கவும்.

இப்பொழுது அதன் நடுவில் தேங்காயை வைத்து (குடும்பி மேலே இருக்க வேண்டும்) சுற்றி 5 மாமர இலைகளை வையுங்கள். கலசத்திற்கு சந்தனம் பொட்டு வைத்து பூ சூட்டுங்கள். வேண்டும் என்றால் வீட்டில் இருக்கும் தங்க நகைகளை வைத்துக் கூட நீங்கள் அழகுபடுத்திக் கொள்ளலாம். ஏனெனில் கலசம் லட்சுமி தேவியின் வடிவமாக கொள்ளப்படுகிறது.

லட்சுமி, கணபதி சிலைகளை வையுங்கள்

பலகையின் மையத்தில் லட்சுமி தேவியின் சிலையையும் கலசத்தின் வலது பக்கத்தில் (தென்மேற்கு திசையில்) விநாயகர் சிலையையும் வைக்க வேண்டும். இப்பொழுது ஒரு அழகான தட்டை எடுத்து அதில் கொஞ்சம் அரிசிகளை பரப்பி, அதனுடன் மஞ்சள் தூள், பூ, நாணயங்கள் வைத்து தாலி தட்டு ரெடி பண்ணி சிலைக்கு முன்னால் வைத்து விடுங்கள்.

வருமானம் தரும் பொருட்கள்

உங்கள் தொழில் சிறப்பாக, நீங்கள் செய்யும் வேலை சிறக்க, பண வருவாய் வர உதவும் உங்கள் கணக்குப் புத்தகங்கள், பீரோ சாவி, தொழில் ரீதியான பொருட்களை முன்னே வையுங்கள்.

குங்குமம் இட்டு தீபம் ஏற்றுங்கள்

இப்பொழுது லட்சுமி தேவிக்கும், கணபதிக்கும் குங்குமத்தால் நெற்றியில் திலகமிட்டு விளக்கேற்றி வையுங்கள். கலசத்துக்கும் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள்.

அர்ச்சனை பூக்கள்

லட்சுமி தேவியையும் கணபதியையும் வழிபட பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளங்கைகளில் சில பூக்களை எடுத்து மனதில் வேண்டுவதை நினைத்து கடவுள்களின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

மந்திரம் ஓதுங்கள்

உள்ளங்கைகளில் பூக்களை வைத்து கைகளை கும்பிடும் அமைப்பில் வைத்து கண்களை மூடி பிராத்தனை செய்ய வேண்டும். இப்பொழுது தீபாவளி பூஜை மந்திரங்களை மனதினுள் ஜெபியுங்கள். ஜெபித்த பிறகு கடவுளின் பாதங்களில் சமர்ப்பிக்கவும்.

நீராபிஷேகம்

லட்சுமி சிலையை எடுத்து அதற்கு பஞ்சாமிர்தம் மற்றும் ஜலத்தைக் கொண்டு நீராபிஷேகம் செய்யுங்கள். பிறகு ஒரு சுத்தமான துணியை கொண்டு துடைத்து மீண்டும் சிலையை கலசத்தின் அருகில் வைத்து விடுங்கள்.

பூமாலை சூடுங்கள்

குங்குமம், மஞ்சள், அரிசி தூவி கடவுளை ஆசிர்வதியுங்கள். இப்பொழுது கையில் உள்ள பூமாலையை எடுத்து அழகாக லட்சுமி தேவிக்கு சூட்டுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி எரித்து காட்டுங்கள். பக்தியுடன் நறுமணமும் கமழட்டும்.

பழங்கள் மற்றும் பலகாரங்கள் படைப்பு

தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் என்று எல்லாவற்றையும் லட்சுமி தேவிக்கு படையுங்கள். பழங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி கடவுளை பசியாற்றுங்கள். ஒரு நாணயத்தை எடுத்து அதன் மேல் பூ வைத்து அவர் பாதங்களில் வைத்து வழிபடுங்கள்.

ஆர்த்தி காட்டுங்கள்

இப்பொழுது ரெடி பண்ண தாலி தட்டை எடுத்து அதில் கற்பூரம் வைத்து சூடம் ஏற்றி பூஜை மணியை அசைத்துக் கொண்டே கடவுளுக்கு ஆர்த்தி காட்டுங்கள்.

தானம் செய்யுங்கள்

இந்த தீபாவளி உங்களுக்கு மட்டுமல்ல கொண்டாட்டம். உங்களைப் போன்று ஏராளமான மக்களுக்கும் உறவுகளுக்கும் கொண்டாட்டம் தான். ஆனால் நிறைய பேர்களால் இதை சிறப்பாக கொண்டாட முடியாது. சில பேருக்கு புத்தாடை கிடைக்காது, உணவு இல்லாமல் இருக்கலாம்.

எனவே உங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கும் செய்து கொண்டாடுங்கள். அவர்கள் முகத்தில் காணும் சந்தோஷம் உங்கள் உள்ளத்தில் ஒளி வீசும். எல்லாருக்கும் இனிப்புகளை வழங்கி அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள்.

பட்டாசுகள் வேண்டாம்

தீபாவளிக்கு போடும் பட்டாசுகளால் காற்று மாசுபடுகிறது. இதனால் நமது நீதிமன்றம் பட்டாசுகள் போடுவதை கட்டுப்படுத்த தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே பட்டாசுகள் வெடிப்பதை முடிந்த அளவு தவிருங்கள்.

காற்று மாசு படாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை. கொண்டாட்டம் என்பது ஒவ்வொரு உயிரும் வாழ ஆக்கப்பூர்வமான ஒன்றாக இருக்கனுமே தவிர அழிவுப்பூர்வமானதாக இருக்கக் கூடாது என்பதை உணர்வோம்.

இந்த தீபாவளி ஸ்ரீ லட்சுமி தேவியின் அருளால் உங்களுக்கு சந்தோஷத்தையும் செழிப்பையும் வழங்கட்டும். அக இருள் நீங்கி ஒளி பெறுக தீபாவளி வாழ்த்துக்கள்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App | Facebook | Twitter | Instagram

Leave A Reply

Your email address will not be published.