ஊடக அறம், உண்மையின் நிறம்!

நாகை சிறுமி கொலையில் திருப்பம்: பக்கத்துவீட்டு இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்

நாகை சிறுமி இறப்பு தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்யாணசுந்தரம்(30 ) என்ற இளைஞனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே சித்தன்காத்திருப்பு பகுதியை சேர்ந்த மாணவி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சென்ற மாணவி, மாலை தோப்பு ஒன்றிற்கு சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் அவரைத் தேடிச்சென்றனர்.

அப்போது கழுத்து, தலை ஆகிய இடங்களில் இரத்தக்காயங்களுடன் சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தாக்கப்பட்டதில் சிறுமி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சிறுமி இறப்பு தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்யாணசுந்தரம்(30 ) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொன்றதாக கல்யாணசுந்தரம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணையில் கல்யாணசுந்தரம் அளித்த வாக்குமூலத்தில் ”நீண்ட நாட்களாக சிறுமியை கண்காணித்து வந்தேன். நேற்று மாலை சிறுமி வீட்டிற்கு பின்புறம் செல்லும்பொழுது அவரை பின் தொடர்ந்து அவரது வாயை பொத்தி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச்சென்றேன். அங்கே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தேன். அப்போது சிறுமி கத்தியதால் அவரது தொண்டையை நெரித்துக் கொலை செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

காட்டுப்பகுதியில் காயமடைந்து கிடந்த சிறுமியை காட்டுப்பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றவர்களில் கல்யாணசுந்தரமும் இருந்துள்ளார். தங்கச்சியை இப்படி செய்துவிட்டார்களே என கதறி அழுத கல்யாணசுந்தரம் மீது அப்போது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

யாரோ குடிகாரர்கள் இப்படி செய்துவிட்டார்கள் என தொடர்ந்து கூறி அனைவரின் கவனத்தையும் கல்யாணசுந்தரம் திசை திருப்பியுள்ளார். ஆனால் காவல்துறையினரின் தொடர் விசாரணையில் கல்யாணசுந்தரம் தற்போது சிக்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.