Sri Lanka 24 Hours Online Breaking News

நியூசிலாந்தில் தோல்வி: நினைத்துப் பார்க்கும் வரலாறு!

0

இந்திய கிரிக்கெட் அணியின் 22 வருட வரலாற்று சாதனையை ஒரு வாரத்துக்குள்ளாக முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது நியூசிலாந்து அணி.

முந்தைய போட்டிகளைப் போல அல்லாமல் 300 ரன்களுக்கு நெருக்கமாக வந்தும், நியூசிலாந்தின் சீரான ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

ஆனாலும், இந்திய அணி இந்த ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றிருக்கலாமோ என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

இது ஏதோ இந்தியாவில் உட்கார்ந்துகொண்டு நியூசிலாந்தில் இருக்கும் அணியைப் பற்றி யோசிக்கும் செயலல்ல. நியூசிலாந்திலேயே வசிக்கும் இந்தியர்களுக்கான ஓர் ஆறுதல் தேடல். அவ்வளவுதான்.

நியூசிலாந்து நாடு பல அற்புதங்களைக் கொண்டது. அதிலும் மிக முக்கியமாக மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்ற பே ஓவல் மைதானத்தின் ஒரு பக்கமாக உயர்ந்து நிற்கும் மௌங்னுய் மலையிலிருந்து வீசும் காற்று, குளுமையை மட்டும் கொண்டுவருவதல்ல.

ருசியான கிவிப் பழங்களின் வாசத்தையும் கொண்டுவந்து சேர்க்கும். அந்த கிவிப் பழங்களுக்கும் இந்தியர்களுக்கும் இருக்கும் தொடர்புதான், இந்திய கிரிக்கெட் அணி வென்றிருக்கலாம் என்ற ஏக்கத்தை அதிகரிக்கிறது.

நியூசிலாந்தில் அதிகமாக பயிரிடப்படும் கிவிப் பழங்கள் அந்த நாட்டுக்குச் சொந்தமானதல்ல. பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே சீனாவில் கிவிப் பழங்கள் கிடைத்திருக்கின்றன.

அங்கிருந்து இரண்டாம் உலகப்போரின்போதுதான் அவை நியூசிலாந்துக்குச் சென்றன. அப்போது நியூசிலாந்துக்குச் சென்றவை கிவிப் பழங்கள் மட்டுமல்ல, அவற்றைச் சுமந்து சென்ற இந்தியர்களும்தான்.

நியூசிலாந்துக்கு 2015ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்குப் பயணமான இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 25,000 என்கிறது நியூசிலாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சகம். இந்தக் கணக்கு 2010ஆம் ஆண்டிலிருந்து 150 சதவிகித வளர்ச்சியைக் கண்டிருந்தது.

அதீத வளர்ச்சியின் காரணமாக சில திருட்டுத்தனங்களும் நடைபெற்றன. நியூசிலாந்தின் கல்விக்கொள்கை மூலம், இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 40 லட்சங்கள் வரை ஸ்காலர்ஷிப் கிடைப்பதால் பல மாணவர்கள் நியூசிலாந்தை நோக்கிப் படையெடுத்தனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். 2015இன் முடிவில் சுமார் 150 மாணவர்கள் போலி சான்றிதழ்களின் மூலம் நியூசிலாந்தில் படிக்கச் சென்றது தெரியவந்ததும், ஸ்காலர்ஷிப் செயல்திட்டங்களைக் கடுமையாக்கியது நியூசிலாந்து.

இதன் பயனாக 2016இல் 9,000 மாணவர்களுக்கும், 2017இல் 6,000 மாணவர்களுக்கும் மட்டுமே நியூசிலாந்து பல்கலைக்கழகங்கள் இடம்கொடுத்தன.

நியூசிலாந்து கல்விக் கொள்கையின் வரைமுறைகள் உயர்த்தப்பட்டதால் நடுத்தர மாணவர்களால் அங்கு சென்று படிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இது இந்திய மாணவர்களை பாதிக்கும் என்று நியூசிலாந்து கணித்துக் கொண்டிருந்தபோதே, கிவிப் பழங்களின் ஏற்றுமதியில் 50% பாதிப்படைந்தது.

நியூசிலாந்தின் கிவிப் பழங்களின் அறுவடையில் பங்கேற்பவர்களில் 15 சதவிகிதத்தினர் மாணவர்கள்தான். இவர்களை நம்பியே உள்ளூர் ஆட்களைச் சார்ந்து கிவி அறுவடையை எந்த நிறுவனமும் எப்போதும் நடத்தியதல்ல.

பெரும்பாலான மாணவர்கள் மற்றும் 1940 முதல் 1980 வரை நியூசிலாந்தில் குடியேறிய இந்தியர்களை நம்பியே இருக்கும் இந்த அறுவடை மிகப்பெரிய பாதிப்படைந்தது.

இதனால் ஒரு பில்லியன் டாலர்கள் வரையில் நியூசிலாந்துக்குப் பிரச்சினைகள் ஏற்பட, ஒரே வருடத்தில் தனது அத்தனை கல்விக் கொள்கைகளையும் மாற்றி 40 லட்சத்துக்கும் மேலாக ஸ்காலர்ஷிப் கிடைக்கும்படி செய்து 2019ஆம் வருடத்தில் 60 சதவிகிதம் அதிக மாணவர்களை இந்தியாவிலிருந்து வரவழைத்தது நியூசிலாந்து.

இப்படி அங்கே இருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் வம்சாவளியினர்தான், அந்த பே ஓவல் மைதானத்தில் நீல ஜெர்சியுடன் அமர்ந்திருந்தவர்கள்.

இப்படிப்பட்ட ஒவ்வொரு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காகவும்தான், இந்தியாவுக்கு வெளியே கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்படுகின்றன.

அப்படிப்பட்ட ஒரு வெற்றிகரமான போட்டியாக இருந்திருக்கவேண்டிய நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரில் தோற்றது மட்டுமின்றி, 22 வருட வரலாற்றையும் பறிகொடுத்துவிட்டு வந்திருக்கிறது இந்திய அணி.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like