ஊடக அறம், உண்மையின் நிறம்!

பத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்கு அரசின் ஊழல் புத்தகங்களா காரணம்?

தமிழக அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான புத்தகங்களை வெளியிட்டதால் பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மூத்த பத்திரிகையாளரும் , சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளருமான அன்பழகன், மக்கள் செய்தி மையம் என்ற பதிப்பகத்தை நடத்தி வருகிறார்.

அதன்மூலம் தமிழக அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் நூல்களாக வெளியிட்டிருக்கிறார் அன்பழகன்.

நடந்துவரும் 43ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அவரது பதிப்பகத்தின் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மக்கள் செய்தி மைய அரங்கை மூடச்சொல்லி புத்தக காட்சியை நடத்தும் பபாசி அமைப்பினர் நேற்று அவரிடம் கூறியுள்ளனர்.

தமிழக அரசுக்கு எதிரான புத்தகங்கள் மக்கள் செய்தி மைய அரங்கில் விற்கப்படுவதே காரணம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த காரணத்தை எழுத்துப் பூர்வமாக கேட்டிருக்கிறார் அன்பழகன்.

கடிதமாக கொடுத்தவுடன் நேற்றைய தினமே அரங்கை காலி செய்திருக்கிறார்.

இந்த நிலையில் பபாசி நிர்வாகத்தினருக்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அன்பழகன் மீது பிணையில் வரமுடியாத பிரிவில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை இன்று ( 12) அதிகாலை 2 மணியளவில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம், “இந்த பொய் வழக்கும் , கைது சம்பவமும் அப்பட்டமான அத்துமீறல்.

தமிழக அரசின் ஊழல்களை புத்தகமாக வெளியிட்டதற்காக காவல்துறை கைது செய்வது கருத்து சுதந்திரத்திற்கும் பத்திரிகை சுதந்திரத்திற்கும் விடப்பட்ட சவால். கருத்து சுதந்திரம் மீது நம்பிக்கை கொண்டோர் அனைவரும் கண்டிக்க வேண்டியது அவசியம் .

புத்தகக் காட்சியில் அரசின் அழுத்தங்கள் காரணமாக கருத்துச் சுதந்திரத்தை மிரட்டிய பபாசியின் செயலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.

ஏற்கனவே பத்திரிகையாளர் அன்பழகன் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டதும் குண்டர் சட்டம் ஏவப்பட்டதும் , நீதிமன்றத்தில் அந்த வழக்குகள் எதிர்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் அன்பழகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது” என்று வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், “சென்னை புத்தக கண்காட்சியில், அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததால் ‘மக்கள் செய்தி மையம்’ அரங்கின் அனுமதியை ரத்து செய்து, பத்திரிகையாளர் அன்பழகனையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

அன்பழகன் உடனே விடுவிக்கப்பட்டு, உரிம அனுமதியும் திருப்பித் தரப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை புத்தகக் கண்காட்சியில் பத்திரிகையாளர் அன்பழகனுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட புத்தகங்களில், ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துடைய புத்தகங்கள் இருந்ததுதான் அவரது கைதுக்கான பின்னணி என சொல்லப்படும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கிறது.

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற செயல்களை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட அன்பழகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “இந்த கைது நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.

அன்பழகன் அம்பலப்படுத்தியுள்ள ஊழல்களை ஆதாரங்களுடன் மறுக்க திராணியில்லாமல் பத்திரிகையாளரை கைது செய்திருப்பது கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். கைது செய்யப்பட்டுள்ள அன்பழகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் சென்னை புத்தக கண்காட்சியில் மூடப்பட்ட அவரது அரங்கம் மீண்டும் திறக்கப்பட வேண்டுமென்றும் கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு தலைவர்களும் பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Leave A Reply

Your email address will not be published.