பாகிஸ்தானின் 73ஆவது சுதந்திர தினம் கொழும்பில் இன்று (14) கொண்டாடப்பட்டது

பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தானிய சமூகமும் இணைந்து பாக்கிஸ்தானின் சுதந்திர தினத்தை கொண்டாடியது.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கலாநிதி ஷஹீட் அஹமட் ஹஷ், பாகிஸ்தான் தேசிய கொடியை ஏற்றி விழாவை ஆரம்பித்துவைத்தார்.

அத்துடன், சுதந்திர தினம் தொடர்பான பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச் செய்தியையும் அவர் வாசித்தார்.

இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்ட உயர் ஸ்தானிகர், பாகிஸ்தான் அமைதி நேசிக்கும் நாடு என்றும் அது மகத்தான தியாகங்களுடன் உருவாக்கப்பட்டதாகவும் கூறினார்.

குறிப்பாக தெற்காசியாவின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பாகிஸ்தான் எப்போதும் ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், காஷ்மீர் ஒற்றுமை தினமாக இந்த ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாகவும் உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை – பாகிஸ்தான் உறவுகள் குறித்து உயர்ஸ்தானிகர் கூறுகையில், பரஸ்பர மரியாதை, புரிதல் மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கையுடனான அதன் உறவுகளுக்கு பாகிஸ்தான் பெரும் முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்தார்.

அத்துடன், பாகிஸ்தான் எப்போதுமே இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக தெரிவித்த அவர், குறிப்பாக இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த பாகிஸ்தானின் ஆதரவு தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.