ஊடக அறம், உண்மையின் நிறம்!

பிகில் விமர்சனம்

நடிகர்-விஜய்
நடிகை-நயன்தாரா
இயக்குனர்-அட்லி
இசை-ஏ.ஆர்.ரஹ்மான்
ஓளிப்பதிவு-ஜி.கே.விஷ்ணு

சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கல்லூரியை இடித்துவிட்டு, அரக்கோணம் அருகில் புதிதாக கல்லூரி கட்டி தருவதாக அமைச்சர் கூறுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள், போராட்டத்தில் குதிக்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, அமைச்சர் தனது அடியாட்களை ஏவிவிட்டு அடித்து துரத்துகிறார். இதையடுத்து விஜய்(மைக்கேல்) வசிக்கும் பகுதியில் மாணவர்கள் தஞ்சமடைகின்றனர். மாணவர்களை தேடி அப்பகுதிக்கு வரும் அடியாட்களை அடித்து துவம்சம் செய்கிறார் விஜய்.

விஜய்யின் இந்த நடவடிக்கையால் கல்லூரியை இடிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்குகிறார் அமைச்சர். இது ஒருபுறம் இருக்க, நயன்தாரவுக்கு அவரது தந்தை ஞானசம்பந்தன் கல்யாண ஏற்பாடுகளை செய்கிறார்.

ஆனால் தான் விஜய்யை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக்கூறி கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார் நயன்தாரா.

விஜய்யின் நண்பரும், தமிழ்நாடு பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளருமான கதிரை, விஜய்யின் எதிரியான டேனியல் பாலாஜி கத்தியால் கழுத்தில் குத்தி விடுகிறார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில், கதிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பயிற்சியாளர் இல்லாததால் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா அடங்கிய பெண்கள் அணியினர் முக்கியமான போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகிறது.

ஆனால் அவர்களை எப்படியாவது போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும் என முடிவெடுக்கும் கதிர், விஜய்யை பயிற்சியாளராக செல்லுமாறு அறிவுறுத்துகிறார். ரவுடியை எப்படி பயிற்சியாளராக ஆக்க முடியும் என அணியின் மேலாளர் கதிரிடம் கேட்க, அப்போது தான் பிகிலின் பிளாஷ்பேக்கை சொல்கிறார் கதிர்.

ராயபுரத்தையே தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ராயப்பனின் (தந்தை விஜய்) மகன் தான் பிகில் (மகன்). அப்பகுதி மக்களுக்கு இடையூறாக பல்வேறு வேலைகளை செய்யும் டேனியல் பாலாஜியின் தந்தையை ராயப்பன் தட்டிக்கேட்கிறார். இதனால் இருவருக்கும் பகை உண்டாகிறது.

ராயப்பனை கொல்ல சதித்திட்டம் தீட்டி வருகிறார் டேனியல் பாலாஜியின் தந்தை. தன்னைபோல் தனது மகனும் ரவுடி ஆகிவிடக்கூடாது என என்னும் ராயப்பன், பிகிலை கால்பந்தாட்ட வீரனாக மாற்ற வேண்டும் என தீர்க்கமாக உள்ளார்.

இந்த விளையாட்டால தான் நம் அடையாளங்கள் மாறும் என மகனுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தி படிப்படியாக முன்னேறும் பிகிலுக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது.

இதற்காக அவர் டெல்லி புறப்படும் வேளையில், ராயப்பனை டேனியல் பாலாஜியின் தந்தை கொன்றுவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பிகில், டேனியல் பாலாஜியின் தந்தையை கொன்றுவிடுகிறார். தந்தை இறந்ததால், ராயபுரம் மக்களை பாதுகாக்க வேண்டும் என பிகில் முடிவெடுக்கிறார். இதனால் பிகில் கால்பந்து விளையாட முடியாமல் போகிறது. பின்னர் மைக்கேலாக வாழ்ந்து வருகிறார்.

விஜய்யின் பின்னணியை கதிர் கூற, அவரது விருப்பப்படி விஜய் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது கால்பந்து வீராங்கனைகளுக்கு பிடிக்கவில்லை. ரவுடி எப்படி பயிற்சியாளர் ஆக முடியும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்திய கால்பந்து அசோசியேசன் தலைவராக இருக்கும் ஜாக்கி ஷெராப், விஜய் பயிற்சி அளிக்கும் தமிழ்நாட்டு பெண்கள் அணியினருக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகிறார். இதனை மீறி பெண்கள் அணி வென்றதா? கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்ற தனது தந்தையின் ஆசையை விஜய் நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை

விஜய், ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு கதாபாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் உடல் மொழி, நடை என வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கும் விஜய், செண்டிமென்ட் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தடம் பதிக்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு முன்னர் ரெயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சண்டை காட்சி வேற லெவல்.

பெண்கள் அணியின் பிசியோதெரபிஸ்டாக வரும் நயன்தாரா, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். மேலும் டேனியல் பாலாஜியும், ஜாக்கி ஷெராப்பும் கொடூரமான வில்லன்களாக வந்து மிரட்டுகிறார்கள். கால்பந்தாட்ட வீராங்கனைகளாக வரும் இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா என ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.

யோகிபாபு, விவேக், கதிர், ஆனந்தராஜ், சவுந்தரராஜா என அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். நடிகர் விஜய்யை போல், கால்பந்து பெண்களுக்கும் இந்த படத்தில் இயக்குனர் அட்லீ முக்கியத்துவம் கொடுத்துள்ள விதம் சிறப்பு. செண்டிமென்ட், ஆக்‌ஷன், ரொமான்ஸ் போன்ற கமர்ஷியல் அம்சங்களுக்கு படத்தில் பஞ்சமில்லை.

விஜய்யின் கதாபாத்திரத்தை செதுக்கி இருக்கிறார் அட்லீ. தந்தை ராயப்பன் கதாபாத்திரம் 4 சீன் வந்தாலும் நச்சுனு இருக்கு. லாஜிக் மீறல்களை சற்று குறைத்திருக்களாம். குறிப்பாக கதிரின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சில மணிநேரங்களில் அவர் பேசுவது போன்ற இடங்களை கவனித்திருக்கலாம்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் ஏ.ஆர். ரஹ்மான். அவரது பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டான நிலையில், பின்னணி இசை மூலம் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக விஜய் வரும் காட்சிகளில் சும்மா தியேட்டரை அதிர வைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணுவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பிகில்’ விசில் போடலாம்…

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App | Facebook | Twitter | Instagram

Leave A Reply

Your email address will not be published.