கண்டி, விவேகானந்தா, குண்டசாலை விவேகானந்தா, அம்பகோட்டை அம்பாள் தமிழ் வித்தியாலயம், பெருந்தோட்ட பாடசாலைகள், பாடசாலை அபிவிருத்தி. மலையகம், மலையக செய்தி, மலையகம் செய்தி, malayagam

பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பாடசாலைகள் அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள 300 மில்லியன் ரூபாய் நிதியை பெற்றுக்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கைச்சாத்திடுமாறு கல்வி அமைச்சரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்குமிடையிலான சந்திப்பு நேற்று (19) கல்வி அமைச்சில் நடைபெற்றபோது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் எம்.பி. ஆகியோர் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்கள் உட்பட பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள குறைந்த வசதிகளைக்கொண்ட பாடசாலைகளை அபிவிருத்திசெய்வதற்காக 300 மில்லியன் ரூபாயை முதலீடு செய்வதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.

இது தொடர்பில் அந்நாட்டுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு கடந்த 4 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த உடன்படிக்கையில் விரைவில் கைச்சாத்திடுமாறு கல்வி அமைச்சரிடம் நேரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு கல்வி அமைச்சரிடம் இணக்கம் தெரிவித்தாக வேலுகுமார் எம்.பி. கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அது குறித்தான உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும் என கல்வி அமைச்சர் எம்மிடம் உறுதியளித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் ஊடாக, மாவட்டங்களுக்கு பொறுப்பானவர்களின் கண்காணிப்பின்கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறும்.

குறிப்பாக கண்டிமாவட்டத்தில் கண்டி விவேகானந்தா, குண்டசாலை விவேகானந்தா, அம்பகோட்டை அம்பாள் தமிழ் வித்தியாலயம் உட்பட 5 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும்.’’ என்றார்.