அக்கரபத்தனை

அக்கரபத்தனை பிரதேசத்தில் நேற்று (18) பெய்த கடும் மழைக்காரணமாக, நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன மற்றுமொரு பாடசாலை மாணவியும் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியை தேடும் நடவடிக்கையில் அக்கரப்பத்தனை பொலிஸார், விசேட அதிரடி படையினர் மற்றும் பொது மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த மாணவியின் சடலம் கொத்மலை நீர்தேகத்திற்கு நீரேந்தி செல்லும் டொரிங்கடன் தோட்ட கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 300 அடி தூரத்திலேயே குறித்த மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மதியழகன் லக்ஷ்மி மற்றும் மதியழகன் சங்கீதா என்ற சகோதரிகள் ஆவர்.

மாணவிகளின் சடலத்தை பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

டொரின்டன் தோட்டத்திலிருந்து கொத்மலைஓயாவுக்கு நீரைக் காவிச் செல்லும் கால்வாய் ஒன்றுக்கு அருகிலுள்ள தமது வீட்டுக்குச் செல்ல முயன்ற மாணவன் மற்றும் மாணவிகள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது, மாணவன் உயிர் தப்பியுள்ளதுடன், மாணவிகள் இருவர் காணாமல் போயிருந்தனர். இந்த நிலையில் அதில் ஒரு மாணவி நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட மற்றொரு மாணவியின் சடலம் இன்று முற்பகல் 9.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.