ஊழல் இல்லாத நல்லாட்சி நடத்தி வரும் மோடிக்கு காமராஜரை புகழ எல்லா தகுதிகளும் உண்டு என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காமராஜரை பற்றி பேச மோடிக்கு என்ன உரிமை? என கேட்கும் காங்கிரஸ் கட்சியினர் அன்று காமராஜரை கைவிட்டு இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சிக்கு ஓடியவர்கள்? மதுரை ரயிலில் வந்த இந்திராகாந்தியை கொலைவெறியுடன் தாக்கி அவர் சிந்திய ரத்தத்தை மோசமாக விமர்சனம் செய்த திமுகவுடன் ஊழல் கூட்டணி சேர்ந்து கொண்டது பதவிக்காகத் தானே?

தன் குடும்பம் தன் மக்கள் என்றில்லாமல் ஓய்வு இன்றி நாட்டுக்காக உழைப்பு! ஊழல் இல்லாமல் நல்லாட்சி. ஏழை – எளியோருக்காக எண்ணற்ற திட்டங்கள் தீட்டி செயலாற்றி வரும் வாழும் காமராஜரான மோடிக்குதானே அவரை குறிப்பிடும் தகுதி உண்டு. எந்த காங்கிரஸ் தலைவரை நீங்கள் ஊழலற்ற அவருடன் ஒப்பீடு காட்ட முடியும்?

காமராஜருக்கு எதிரே விருதுநகரில் கல்லூரி மாணவரை நிறுத்தி கள்ள ஓட்டுப் போட்டு தோற்கடித்து அவரை அவமதித்த திமுகவுடன் கூட்டணி சேர்ந்த காங்கிரஸ் அவசரநிலை காலத்தில் அடிவாங்கியதாக புலம்பல் இந்தியை எதிர்த்ததாக வீரம் பேசிவிட்டு துப்பாக்கியால் சுட்ட காங்கிரஸ் கட்சியுடன் திமுகவின் சந்தர்ப்பவாத கூட்டணி?

அன்று ஒரு கல்லூரி மாணவரை தேர்தலில் நிறுத்தி மாபெரும் மக்கள் தலைவரை தோற்கடித்த திமுக அதே விருதுநகர் மண்ணில் நின்றுகொண்டு இன்று காமராஜரின் புகழ்பாட திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? விஞ்ஞானபூர்வமான ஊழல்வாதிகள் எங்கள் ஊழலற்ற உத்தம தலைவன் மோடி காமராஜரின் புகழ்பாடுவதை விமர்சிக்கலாமா?

மோடி கோட்-சூட் போடுவதை விமர்சிக்கும் ஸ்டாலின் போன்ற தலைவர்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு செல்லும்போது நீங்கள் கோட்-சூட் அணிவதில்லையா?

எந்த நாட்டுக்கு எப்போது செல்கிறோம், எதற்கு செல்கிறோம் என்பதை பாதுகாவலாளரிடம் கூட தெரிவிக்காமல் ரகசிய பயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி போன்ற தலைவர் கண் துஞ்சாமல், ஓய்வு இல்லாமல் ஒளிமறைவில்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று நல்லெணத்தை பெற்றதால்தான் இன்று உலகத்தில் சீனா உட்பட அத்தனை நாடுகளும் தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றார்கள்.

காங்கிரஸ் செய்ய தவறிய காமராஜர் ஆட்சியை தற்போது ஊழல் இல்லாத நல்லாட்சி நடத்தி வரும் மோடிக்கு காமராஜரை புகழ எல்லா தகுதிகளும் உண்டு” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.