விசாரணை விவகாரத்தில் தலையிடவில்லை – பிரதமர்

விசாரணை விவகாரத்தில் தலையிடவில்லை – பிரதமர்

கொழும்பு, பம்பலபிட்டிய பகுதியில் டிப்பென்டர் ரக வாகன மோதி பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி படுகாயமடைந்த
சம்பவம் தொடர்பில் தான் யாரையும் கைதுசெய்யுமாறோ விடுவிக்குமாறோ உத்தரவு பிறப்பிக்கவில்லை என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, நாடாளுமன்ற உறுப்பினர்
மஹிந்தானந்த அலுத்கமகேவின் குற்றசாட்டுக்கு பதிலளிக்கையில் பிரதமர் இதனைக் கூறினார்.

கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி கொழும்பு, பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பயணித்த மோட்டார் சைக்கிளை
மோதிவிட்டு டிப்பெண்டர் ரக வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி
ஆனந்த சாகர சரத் சந்திர, சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இந்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் டிபென்டர் வாகனத்தில் பயணித்தவர்கள் மற்றும் பென்டர் வாகனத்துடன் பயணித்த பிராடோ ரக வாகனத்தில்
பயணித்தவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் மகனும் கைதுசெய்யப்பட்டதுடன், சந்தேக நபர்கள் 7 பேரை பிணையில் விடுத்த
நீதிமன்றம், டிபென்டர் வாகனத்தை செலுத்திய சாரதியை மார்ச் மாதம் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமரின் உத்தரவின்படியே கைதுசெய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே
நாடாளுமன்றில் இன்று குற்றம் சுமத்தினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாரையும் கைதுசெய்யவோ விடுதலை செய்யவோ தனக்கு எந்த தேவையும் இல்லையென்றும், இவ்வாறான
குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு மூளை சரியில்லை என்றால் அதற்கு எம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார்.

Related posts