Sri Lanka 24 Hours Online Breaking News

ஷங்கரின் மூன்று விதிகள்! அவருக்கே அதுக்கு அனுமதியில்லையாம்!

0

கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிவிட்டார் இயக்குநர் ஷங்கர். ஆனால், ஷூட்டிங்கைத் தொடங்குவதற்கு முன்பு ஷங்கர் கொடுத்த ரூல் புக் தான் ஷூட்டிங் ஸ்பாட் முழுக்க ஒரே பேச்சாக இருக்கிறது.

ஷூட்டிங்குக்கு வந்தால், வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு உறங்கச் செல்லும் ஜெனரேட்டர் டிரைவர்களைக்கூட ஸ்பாட்டுக்குள் நுழைந்து வேடிக்கை பார்க்க வைத்திருக்கிறது ஷங்கரின் விதிமுறைகள். அப்படி என்னதான் இருக்கிறது அந்த ரூல் புக்கில்?

அலைபேசிக்கு அனுமதியில்லை

பொதுவாகவே பல ஷூட்டிங் ஸ்பாட்களில் அலைபேசிகளை அனுமதிப்பதில்லை. ஸ்பாட்டுக்குள் இருக்கும்போது அலைபேசிகளை பயன்படுத்தினால் உடனடியாக எங்கிருந்தாவது ஒரு குரல் திட்டத் தொடங்கும்.

அடுத்து, ஏதாவது பொருள் வந்து அருகே விழும். ஆனால், இம்முறை ஸ்பாட்டுக்குள் நுழையும்போதே டோக்கன் போட்டு அலைபேசிகளை பத்திரமாக ஒரு இடத்தில் கொடுத்துவிட்டுத்தான் நுழையச் சொல்கிறார்களாம்.

கமலைச் சந்திப்பதற்காக முக்கியமான நபர்கள் என்று சொல்லிக்கொண்டு யார் வந்தாலும் அலைபேசிகளை வாங்க சொல்லியிருக்கிறார்கள். அப்படி கேட்டபோது ஒருவர் அலைபேசியை கொடுப்பதற்கு மறுக்க, ‘இதோ பாருங்க. இது ஷங்கர் சார் போன்’ என்று காட்டியிருக்கிறார்கள். இயக்குநர் போனுக்கே அனுமதியில்லை எனும்போது மற்றவர்கள் எம்மாத்திரம்.

நோ லீக்ஸ்

திரைப்படத்தைப் பற்றிய எந்தவொரு செய்தியும், படக்குழுவாக அறிவிக்காமல் வெளியே சென்றுவிடக் கூடாது என்பதால் ஒரே ஆட்களை ஷூட்டிங்கில் வைக்காமல் படப்பிடிப்பு நடத்திவருகின்றனர்.

மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு துறையில் வேலை செய்யும் ஆட்களையும் மாற்றிவிடுகின்றனர். ஷூட்டிங் எடுக்கப்படும் காட்சிகளைக் கோத்து, எந்தக் கதை படத்தின் நடுநாயகமாக அமைந்துள்ளது என்பது வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.

கடைசி ஷெட்யூல்

பிரமாண்டமான முறையில் உருவாக்கப்படும் திரைப்படம் என்பதால் ஏற்கனவே அதிக பணமும், நாட்களும் செலவாகிவிட்டன. இனி இருக்கும் காலத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதால், இந்த ஷெட்யூலையே கடைசி ஷெட்யூல் என நினைத்து வேலை செய்யச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஏதாவது ஒரு துறையில் வேலை சரியாக நடக்காமல் ஷூட்டிங் பாதிக்கப்பட்டால் அடுத்து ஷங்கர் படத்தில் வேலை செய்யும் எண்ணத்தையே மறந்துவிட வேண்டும்.

மேற்கண்ட மூன்று விதிமுறைகளையும் கடுமையாகக் கடைப்பிடித்து பூந்தமல்லியிலுள்ள EVP ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடைபெறுகிறது.

மேற்கண்ட மூன்று விதிமுறைகளில், கடைசி விதி மட்டும் கமலின் ஏற்பாடு. காரணம், அண்மையில்தான் வெளிநாட்டுக்குச் சென்று சிறு அறுவை சிகிச்சை செய்துகொண்டு வந்திருக்கிறார் கமல்ஹாசன்.

அத்துடன், மிக பிரமாண்டமான சண்டைக்காட்சிகளும் படமாக்கப்படுகிறது. ஒரு காட்சியை மீண்டும் எடுக்க வேண்டும் என்றாலும் அதிக இழப்புகள் ஏற்படும்.

எனவே, கடைசி ஷெட்யூலாக மொத்தமாக 50 நாட்களைக் கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன். இந்த ஷெட்யூலுக்குள்ளாகவே மீதமிருக்கும் படத்தை முடிக்கவேண்டிய கட்டாயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்தியன் 2 படக்குழு.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like