Sri Lanka 24 Hours Online Breaking News

ஹெட்போன்கள் உயிரைக் காப்பாற்றுமா?

0

ஹெட்போன் பயன்படுத்தி பாடல் கேட்பது, போன் பேசுவது, வாய்ஸ் கமான்ட் மூலமாக தேவையானவற்றை சுலபமாகச் செய்வது என எத்தனையோ வசதிகள் கிடைத்தாலும், சாலையில் நடந்து செல்லும்போது ஏற்படும் விபத்துகள், போன் சார்ஜில் இருக்கும்போது ஹெட்போன் பயன்படுத்துவதால் மின்சாரம் பாய்வது, காது கேட்கும் திறனில் தொய்வு காணப்படுவது எனக் குறைகளும் இருக்கின்றன.

இதில், சாலையில் செல்லும்போது ஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இதற்கு புது வகையிலான தீர்வுடன் வந்திருக்கிறது கொலம்பியா பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சி நிலையம்.

பாடல் கேட்டுக்கொண்டே சாலையில் செல்லும்போது, நமக்கு அருகே அல்லது நம்மை நோக்கி ஆபத்து வரும்போது அதை முன்னறிந்து நம் காதுகளில் மாட்டியிருக்கும் ஹெட்போன்களே கூறினால் எப்படியிருக்கும்? இதுதான் கொலம்பியா ஆராய்ச்சியாளர்கள் கையிலெடுத்திருக்கும் சவால்.
இதற்கு உலகளவிலிருந்து இதுவரை 85 கோடி ரூபாய் நிதி கொடுக்கப்பட்டிருக்கிறது. படிக்கும்போதே இத்தனை சுலபமாக இருக்கும் ஆராய்ச்சிக்கு ஏன் இவ்வளவு பணம் எனப் பலரும் கேட்டபோது, நியூயார்க் வீதிகளில் இதன் பேஸிக் வெர்ஷனை செயல்படுத்திக் காட்டியிருக்கின்றனர். அதில் கிடைத்த ரிசல்ட்டை மூன்று சூழ்நிலைகளில் பொருத்திப் பார்ப்போம்.

முதல் சூழல்

வடிவேலு வாய்க்கால் கரையைத் தாண்டும் காமெடி காட்சியைப் பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தக் காட்சியில், ஒரு நோக்கத்துடன் வாய்க்காலைத் தாண்ட முயற்சி செய்யும் வடிவேலுவை, திடீரென ‘பாத்து வாங்க. விழுந்துடாதீங்க’ என கத்தி ஒருவர் அதிர்ச்சியடைய வைத்து கீழே விழ வழி செய்வார்.

அதுபோலவே, சாலையில் ஹெட்போனுடன் வரும் ஒருவர், திடீரென ‘ஆக்சிடென்ட் ஆகப் போகுது இந்தப் பக்கம் போ’ என ஹெட்போனில் கேட்கும் குரல் கேட்டால் எந்தப் பக்கம் செல்வார்?

மேலே குறிப்பிட்ட சூழலில், ஹெட்போன் அணிந்திருப்பவர் எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என்பதை, அந்த ஹெட்போனின் தொழில்நுட்பம் சரியாகக் கணித்து சொல்ல வேண்டும். இல்லையென்றால் வாகனம் வரும் பக்கமே அவர் நகர்ந்துவிடக் கூடும்.

எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என்பதை, ஹெட்போன் அணிந்திருப்பவரைச் சுற்றியுள்ள சூழலில் ஏற்படும் நிகழ்வுகளைக் கணித்து சரியான வழியை அந்த ஹெட்போன் சொல்ல வேண்டும்.

அதற்காகவே, மிகச் சிறிய மைக்ரோபோன்களை அந்த ஹெட்போன்களில் பொருத்தி, அதைச் சுற்றியிருக்கும் சூழலிலிருந்து வெளியாகும் ஒலிகளை கவனமாகப் பிரித்து ஆராய்ந்து சரியாகச் சொல்வதற்கான முயற்சிகளை அந்தத் தொழில்நுட்பம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு 85 கோடி ரூபாய் போதுமா?

இரண்டாவது சூழல்

விபத்து நடைபெறப்போவதை கணித்து ஹெட்போன் சரியாகச் சொல்லிவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஹெட்போன் சொல்லும் திசையிலேயே மனிதனால் நகர முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.

உதாரணத்துக்கு, சிங்கம் திரைப்படத்தில் அனுஷ்காவை ரவுடிகள் துரத்தும்போது அவர் காரில் தப்பிப்பார். அவருடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் சூர்யா, வலது பக்கம் திரும்பச் சொல்லும்போது அவர் தவறாக இடது பக்கம் திரும்பிவிடுவார். இதனால், பிரகாஷ் ராஜ் அனுஷ்காவைச் சுட்டுவிடுவார்.

அதன்பிறகு, அனுஷ்காவை மருத்துவமனையில் சேர்த்து, அவரது உயிரைக் காப்பாற்றுவார் சூர்யா. அங்கிருந்து பிரகாஷ் ராஜை பழிவாங்க சூர்யா கிளம்பும்போது, முதலமைச்சரின் பெண்ணை கடத்தப்போகிறேன் எனச் சொல்வார் பிரகாஷ் ராஜ். நிற்க.

உதாரணத்துக்காக சிங்கம் படத்தின் ஒரு காட்சியைப் பற்றிப் பேசத் தொடங்கிய நாம், க்ளைமாக்ஸ் வரை சென்றுவிட்டோம் பார்த்தீர்களா! இப்படித்தான் மனித மூளை சில தன்னிச்சையான செயல்களை செய்யும். எனவே, ஹெட்போனிலிருந்து வரும் கட்டளையை மனித மூளை உள்வாங்கி செயலாற்றுவதற்கான கால அளவையும் கணித்து, எவ்வித பதற்றத்துக்கும் வழிகொடுக்காமல் மிக வேகமாகச் செயல்படும் அளவுக்கு அந்த ஹெட்போனின் திறன் இருக்க வேண்டும். இதற்கு 85 கோடி போதுமா, போதாதா?

மூன்றாவது சூழல்

ரயில், பஸ், கார் அல்லது பைக்கில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, நம்மை அதிவேகத்தில் பல வாகனங்கள் கடந்துசெல்லும். அப்படிச் செல்லும்போதெல்லாம் இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என ஹெட்போன் கட்டளைகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தால் பாடல் கேட்பதைவிட, தலையைச் சுற்றி அந்த ஹெட்போனை தூக்கி வீசிவிடுவோம்.

அப்படிப்பட்ட பண விரயத்துக்கு நம்மை ஆளாக்காமல் இருக்க, ஹெட்போன் அணிந்திருப்பவர் இருக்கும் சூழலைக் கணித்து, இந்தச் சூழலில் இவருக்கு உதவ வேண்டும், உதவக் கூடாது என்று முடிவெடுக்கும் அளவுக்கான அறிவை இந்த ஹெட்போன்களுக்கு உருவாக்க வேண்டும்.

பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் மக்களைக் கவனித்தால் இதை உணரமுடியும். எத்தனையோ வாகனங்கள் வேகமாகச் சென்றாலும், அசராமல் உறங்கும் அவர்கள் போலீஸ் சைரன் சத்தம் கேட்ட மாத்திரத்தில் உடனடியாக எழுந்து விடுவார்கள். இதற்குக் காரணம், அந்தச் சத்தம் நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்று ஆழ்மனத்தில் பதிவு செய்திருப்பதுதான்.

பொலிஸ் சைரனுக்கும், ஆம்புலன்ஸ் சத்தத்துக்குமான வித்தியாசத்தை உறக்கத்திலேயே உணரும் அளவுக்கு அவர்களது உள்ளுணர்வு கூர்மையாக இருக்கும். அத்தகைய கூர்மையான அறிவை ஒரு செயற்கை நுண்ணறிவுக்கு உருவாக்க வேண்டிய வேலையைத்தான் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் செய்து வருகிறார்கள்.

இதன் ப்ரோடோடைப் வெற்றியடையும் பட்சத்தில், இந்தத் தொழில்நுட்பத்தின் வடிவம் பெரிதாகும். அப்போது, இதுவரை கிடைத்திருக்கும் 85 கோடி ரூபாய் போதாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

விரைவிலேயே ஒவ்வொரு மனிதனும் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதைக் கணித்துச் சொல்ல பல விதமான டிவைஸ்கள் வரக்கூடும். அவை அத்தியாவசிய வாழ்க்கைக்குத் தேவை என்று விளம்பரப்படுத்தப்படும். ஸ்மார்ட் டிவைஸ்கள் என்று கூறி, மனிதனின் ஸ்மார்ட் தன்மையை மழுங்கடிக்க எத்தனையோ பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்துவருகின்றன.

அவற்றுக்கெல்லாம் கிடைத்திருக்கும் ஒரே பரிசோதனை நிலையம் மக்களாகிய நாம்தான். அதிலும், இதுபோன்ற டெக்னாலஜி பொருட்களுக்கு இந்தியச் சந்தையில் பெரிய வரவேற்பு இருக்கிறது. எனவே, ஹெட்போன் சொல்லும்படியான காலத்தை நோக்கி நகர இப்போதே தயாராகிக்கொள்ள வேண்டியதுதான்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like