ஊடக அறம், உண்மையின் நிறம்!

‘1000 ரூபாய் குறித்து அரசாங்கம் தௌிவுப்படுத்த வேண்டும்’

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளம் வழங்குவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி வரவேற்பதாக முன்னணியின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கம் / முன்னணியின் பொங்கல் விழா நிகழ்வில் இன்று (19) கலந்துகொண்டு பின்னர் எதிர்கால அரசியற் செயற்பாடுகள் தொடர்பில் முக்கியஸ்தர்களுடன் இடம்பெறற் கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஹட்டன் சி.டயிள்யூ எப் மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கம் / முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய பழனி திகாம்பரம் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.உதயகுமார், சரஸ்வதி சிவகுரு, பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய அமைப்பாளர் ஜி நகுலேஸ்வரன், மகளீர் அணித்தலைவிகள், அமைப்பாளர்கள், காரியாலய உத்தியோகஸ்த்தர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்தினால் மார்ச் முதலாம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தமை வரவேற்கத்தக்கது,

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு தடையாக இருந்து வரும் கூட்டு ஒப்பந்தத்தை முற்றாக நீக்கி இனி வரும் காலங்களில் அரசாங்கத்தினூடாக சம்பளம் உயர்வினை வழங்க வேண்டும்.

இதுவரை காலமும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக்கு கூட்டொப்பந்தம் தடையாக இருக்கின்ற நிலையில் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக எவ்வாறு அரசாங்கம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது என்பதனை அறிய மக்கள் ஆவலாக உள்ள நிலையில் அதனை தெளிவுபடுத்த அரசு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

-மு.இராமச்சந்திரன்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.