2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது.
2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது தமிழர்களின் பாரம்பரியமாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி தான்.
வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடக்கும் போட்டிகள் உலகப்புகழ் பெற்றது.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தான் நடைபெறும்.
வழக்கமாக அங்குள்ள அந்தோணியார் தேவாலய புத்தாண்டு விழாவை முன்னிட்டு ஜனவரி 1 ஆம் தேதி தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கமாகும்.
ஆனால் இம்முறை இன்று (ஜனவரி 6) ஆம் தேதி நடக்கிறது. இந்த போட்டியில் 746 காளைகள் பங்கேற்கும் நிலையில், 297 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்றன. நேற்று காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களும் இன்று டோக்கன் வழங்கப்பட்டது.
மேலும் வாடிவாசல், பேரிகார்டு அமைப்பது, மருத்துவ பரிசோதனை செய்யும் இடம், காளைகள் கலெக்சன் பாயிண்ட் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதன் முன்னேற்பாடுகளை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆய்வு செய்தார்.
இந்நிலையில் இன்று தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
முன்னதாக மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். போட்டி நடைபெறும் இடத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடையும் காளைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக ஆம்புலன்ஸ் வசதி, காயம் அடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
போட்டி நடைபெறும் திடலை சுற்றி கேமராக்கள் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
10 சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர் மற்றும் காளை உரிமையாளருக்கு பல்சர் பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது.