ஊடக அறம், உண்மையின் நிறம்!

பெற்ற குழந்தையை கொன்று, பாராங்கல்லை வைத்த கொடூரத் தாய்!

மூன்றாவது திருமணத்திற்கு இடையூறாக இருந்ததால் 6 மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய், 3ஆவது கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை கிராமம் முருகர் கோயில் மலையடிவாரத்தில் பச்சிளம் குழந்தை மண்ணில் புதைக்கப்பட்டு அதன் மீது பாறாங்கல் வைக்கப்பட்டிருந்தது.

கால்கள் மட்டும் வெளியே தெரிந்தது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்த்த போது சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.

வேலூர் அரசு மருத்துவமனை டாக்டரை வரவழைத்து, குழந்தையின் உடல் பாகங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். யாரேனும் குழந்தையை கடத்தி புதையலுக்காக நரபலி கொடுத்தார்களா? என்கிற ரீதியில் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா வரகூர் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி(23) மற்றும் அவரது மனைவி மஞ்சுளா(23) ஆகியோர் இந்த கொடூர கொலையை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து ராஜாமணி மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஆற்காடு அடுத்த தாழனூர்சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. அவரை தாய்மாமனான பஞ்சாட்சரம் ஓராண்டுக்கு முன் திருமணம் செய்துள்ளார். அதன் பின் வேலைக்கு சென்ற மஞ்சுளாவிடம், ‘உனது கணவருக்கும் உனக்கும் வயது அதிகம் வித்தியாசம் உள்ளது.

அவரை திருமணம் செய்து கொண்டாயே’ என தோழிகள் கேலி செய்துள்ளனர். இதையடுத்து கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணமான 2 மாதத்தில் அவரை பிரிந்து தனது ஊரில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

இதற்கிடையில் தனது அக்காளின் நண்பரான தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவருடன் காதல் ஏற்பட்டு அவரை 2வது திருமணம் செய்து தேனியில் வசித்து வந்தார்.

அங்கு அவர்களுக்கு கடந்த மே மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கிடையில் பாண்டியராஜனுடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து குழந்தையுடன் தாழனூர்சத்திரத்துக்கு மஞ்சுளா வந்து தங்கியுள்ளார்.

அதன்பின் தான் வேலை செய்த ஷூ கம்பெனியில் ஏற்கனவே காதலித்து வந்த ராஜாமணி என்பவருடன் மஞ்சுளா மீண்டும் காதலை புதுப்பித்து, திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். ஆனால் குழந்தை இடையூறாக உள்ளது என ராஜாமணி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 23ஆம் திகதி குழந்தையை கம்மவான்பேட்டைக்கு கொண்டு வந்து கழுத்தை நெரித்து கொலை செய்து மலையடிவாரத்தில் சிறிய பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர்.

அதன் மீது பாறாங்கற்களையும் வைத்துள்ளனர். அன்றைய தினமே கோயிலில் ராஜாமணியுடன் 3ஆவது திருமணம் செய்து கொண்ட மஞ்சுளா வரகூர் கிராமத்தில் தங்கியுள்ளார்.