இதுவே கடைசி.. விடைபெறுகிறேன்... கோலியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த ரோஹித்
போட்டி முடிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டது இந்திய அணி. அதன் பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்ற போது, ரோஹித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து உள்ளார்.
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது.
அதன் முடிவில் இறுதிப் போட்டியில் 76 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதை பெற்ற விராட் கோலி இதுவே தனது கடைசி டி20 உலக கோப்பை மற்றும் தனது கடைசி டி20 போட்டி என்றும் கூறினார்.
இந்த நிலையில், போட்டி முடிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டது இந்திய அணி. அதன் பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்ற போது, ரோஹித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாகவும், டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்றார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து ஓய்வு பெற்று உள்ளனர்.
இதை அடுத்து இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றியால் மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்கள் இரண்டு ஜாம்பவான்களின் ஓய்வு முடிவால் சோகமடைந்துள்ளனர்.