147 வருட கிரிக்கெட் வரலாற்றில் சந்திக்காத அவமானம்... பாகிஸ்தான் பரிதாப சாதனை!
இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய பாகிஸ்தான், நான்காம் நாளின் பிற்பகுதி மற்றும் ஐந்தாம் நாள் மீதமிருந்த நிலையில் நிதானமாக பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்யும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
147 வருட கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத படுமோசமான தோல்வியை இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி சந்தித்து இருக்கிறது. அதாவது, முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் சேர்த்த பின்னரும் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்து படுமோசமான சாதனையை செய்து உள்ளது.
இத்தனை காலத்தில், எந்த ஒரு அணியும் முதல் இன்னிங்ஸில் 550 ரன்கள் சேர்த்த பின் இன்னிங்க்ஸ் தோல்வியை சந்தித்ததில்லை. இந்த தோல்வி கிரிக்கெட் உலகில் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி உள்ளது.
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணி 149 ஓவர்களில் 556 ரன்கள் குவித்ததுடன், மூன்று பேட்ஸ்மேன்கள் சதம் அடித்து இருந்தனர்.
அப்துல்லா ஷபிக் 102 ரன்களும், ஷான் மசூத் 151 ரன்கள், ஆகா சல்மான் 104 ரன்கள் குவித்த நிலையில, இரண்டாவது ஆடிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரரும், கேப்டனுமான ஒல்லி போப் இரண்டாவது ஓவரிலேயே டக் அவுட் ஆனார்.
எனினும், அதன் பின்னர் களமிறங்கிய ஜாக் கிரவ்ளி 78 ரன்களும், பென் டக்கெட் 84 ரன்கள் சேர்த்தனர். ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 454 ரன்கள் கூட்டணியாக ரன் சேர்த்தனர்.
ஜோ ரூட் 262 ரன்களும், ஹாரோ ப்ரூக் முச்சதத்தை கடந்து 317 ரன்களும் குவித்து இருந்த நிலையில், இங்கிலாந்து அணி 150 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 823 ரன்கள் சேர்த்து டிக்ளர் செய்தது.
இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய பாகிஸ்தான், நான்காம் நாளின் பிற்பகுதி மற்றும் ஐந்தாம் நாள் மீதமிருந்த நிலையில் நிதானமாக பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்யும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், விரைவாக ரன் குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடிய பாகிஸ்தான் அணி வரிசையாக விக்கெட்களை இழந்து, ஐந்தாம் நாளில் 220 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததுடன், முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கும் மேல் சேர்த்த பின் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பரிதாபமான சாதனையை செய்தது.
மேலும், பாகிஸ்தான் அணி தொடர்ந்து சந்திக்கும் ஆறாவது டெஸ்ட் போட்டி தோல்வி இதுவாகும் என்பதுடன், சொந்த மண்ணில் கடைசியாக ஆடிய 9 போட்டிகளில் பாகிஸ்தான் சந்திக்கும் 7ஆவது தோல்வி இதுவாகும்.
இதேவேளை, இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி தொடரை வெல்ல அந்த இரண்டையும் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.