பிரம்மாண்ட டி20 ரெக்கார்டை படைத்த அபிஷேக் சர்மா... எந்த வீரரும் இதுவரை செய்யாத சாதனை!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா பல்வேறு சாதனைகளை தகர்த்து உள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா பல்வேறு சாதனைகளை தகர்த்து உள்ளார்.
37 பந்துகளில் சதம் அடித்ததுடன், 17 பந்துகளில் அவர் அரைசதம் கடந்து உலக அளவில் குறைந்த ஓவர்களில் சதம் அடித்த வீரர் என்ற பிரம்மாண்ட டி20 சாதனையை செய்து இருக்கிறார் அபிஷேக் சர்மா.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், அபிஷேக் சர்மா 4.2 ஓவர்களிலேயே 17 பந்துகளில் அரை சதம் கடந்து டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிவேகமாக 50 ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
முன்னதாக யுவராஜ் சிங் 2007 டி20 உலகக் கோப்பையில் 12 பந்துகளில் அரை சதம் அடித்த நிலையில், டி20 போட்டிகளில் இதுவரை உலக சாதனையாக உள்ளது.
தற்போது அபிஷேக் சர்மா அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார். அரை சதம் கடந்த பின்னர், அபிஷேக் சர்மா பத்து 6 மற்றும் ஐந்து 4 அடித்து 37 பந்துகளில் தனது இரண்டாவது டி20 சதத்தை நிறைவு செய்தார்.
10.1 ஓவரில் சதத்தை நிறைவு செய்த அபிஷேக் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த ஓவர்களிலேயே சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார் .
முன்னதாக, 2023இல் தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 10.2 ஓவர்களில் சதம் அடித்து இருந்தார். அந்த சாதனையை உடைத்து இருக்கிறார் அபிஷேக் சர்மா.
இதேவேளை, இந்தப் போட்டியில் இந்திய அணி 6.3 ஓவர்களிலேயே 100 ரன்களை எட்டி சாதனை படைத்தது. இதுவே இந்திய அணியின் விரைவான 100 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், பவர் பிளே ஓவர்களில் மட்டுமே அபிஷேக் சர்மா 58 ரன்களை சேர்த்து இருந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த சாதனையை செய்தார் அபிஷேக் சர்மா.
முன்னதாக ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023ஆம் ஆண்டு பவர் பிளே ஓவர்களில் 53 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இதேவேளை, இந்திய அணிக்காக விரைவாக டி20 சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்த இடத்தை பிடித்து இருக்கிறார்.
ரோஹித் சர்மா 35 பந்துகளில் டி20 சதத்தை அடித்து இருந்தார். தற்போது அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் அடித்து இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளார்.
அத்துடன், சர்வதேச அளவில் அதிவேக டி20 சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் மில்லர் மற்றும் ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளனர்.
அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் அடித்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்தார். இதுவே இந்திய வீரர் ஒருவர் சர்வதேச டி20 போட்டிகளில் அடித்த அதிகபட்ச ரன் ஆகும்.
மேலும், இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 13 சிக்ஸ் அடித்ததே இந்திய வீரர் ஒருவர் ஒரே சர்வதேச டி20 போட்டியில் அடித்த அதிகபட்ச சிக்ஸ் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.