மும்பை அணியில் ஏற்பட்ட விரிசல்; சிஎஸ்கேவுடனான தோல்வியால் தூக்கத்தை தொலைத்த ஹர்திக்!
மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
மும்பை அணிக்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகள் வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவை பதவியில் இருந்து நீக்கி விட்டு, ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்கியதுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் பிரச்சனைகள் ஆரம்பித்தன.
இந்த முடிவு ரோஹித் சர்மா மட்டுமின்றி அந்த அணியின் முக்கிய வீரர்களான பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்ததால் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் இந்த தோல்விகளுக்கு காரணம் என விமர்சனங்கள் எழுந்தன.
எனினும், அடுத்த இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப்பெற்றதுடன், கேப்டன் ஹர்திக் பாண்டியா தன்னம்பிக்கை பெற்று இருந்தார்.
ஆனாலும், ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் தனிப்பட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டாலும் அணியின் நடவடிக்கைகளில் மூத்த வீரர்களாக எந்த ஈடுபாட்டையும் கட்டவில்லை.
இந்த நிலையில், அந்த அணி ஆறாவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி ஓவருக்கு 9 ரன்கள் என்ற அளவில் சேர்த்தது.
சிஎஸ்கே அணியின் சிவம் துபே ஸ்பின்னர்களின் ஓவர்களில் அதிக சிக்ஸ் அடிப்பார் என பயந்த ஹர்திக் பாண்டியா முகமது நபி மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோரை பயன்படுத்தாமல் தானே பந்து வீசினார்.
மேலும், கடைசி ஓவரில் மற்றொரு வேகப் பந்துவீச்சாளரான ஆகாஷ் மதவாலை பயன்படுத்தாமல் தானே பந்து வீசிய நிலையில், அது தவறான முடிவாக மாறியது.
அந்த ஓவரில் தோனி ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க சிஎஸ்கே அணி அந்த ஒரு ஓவரில் மட்டும் 26 ரன்கள் குவிக்க 20 ஓவர்களில் 206 ரன்கள் குவித்தது.
ஹர்திக் பாண்டியா செய்த அந்த தவறால் மும்பை அணி 20 ரன்களில் தோல்வி அடைந்ததுடன், ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளர்களை நம்பாமல் தானே பந்து வீசியதால் தான் மும்பை அணி தோற்றதாக கூறப்படுகின்றது.
இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏற்கெனவே அணிக்குள் இருந்த பிளவுகள் பெரிதாகி விட்டதாகவும், ஹர்திக் பாண்டியா கடும் அழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.