92 வருட டெஸ்ட் வரலாற்றில் தரமான சாதனை... அதிக வெற்றிகளை குவித்தது இந்திய அணி
92 ஆண்டுகால இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக, இந்திய அணி தோல்விகளை விட அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் ஒரு முக்கியமான சாதனை உருவாக்கப்பட்டுள்ளது. 92 ஆண்டுகால இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக, இந்திய அணி தோல்விகளை விட அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.
வங்கதேச அணிக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இச்சாதனையை அடைந்துள்ளது.
இந்திய அணி இதுவரை மொத்தம் 580 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. 179 வெற்றிகளுடன், 178 தோல்விகள், 222 டிரா, மற்றும் 1 டை என, இந்திய அணியின் சாதனை குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
1932ஆம் ஆண்டு முதல் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தன் பயணத்தை தொடங்கியது. அப்போதிருந்து இந்தியா பல தோல்விகளைச் சந்தித்தது.
1952ஆம் ஆண்டு, சென்னை மண்ணில் இந்திய அணிக்கு முதல் டெஸ்ட் வெற்றி கிடைத்தது. அதே சென்னை மண்ணில்தான் தற்போது 72 ஆண்டுகளுக்கு பின்னர், இந்திய அணி தோல்விகளை விட அதிக வெற்றிகளை பெற்ற சாதனையையும் கொண்டாடியது.
1988 வரை ஒரு ஆண்டில் கூட இந்திய அணி தோல்விகளை விட அதிக வெற்றிகளை பெறவில்லை. ஆனால், 1988ஆம் ஆண்டு முதல் இதிலிருந்து மாற்றம் காணப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் இந்தியா 79 வெற்றிகளை பெற்றது.
அதற்கு முன்பு 432 போட்டிகளில் வெறும் 100 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்தது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் இந்திய அணி 148 போட்டிகளில் விளையாடி 79 வெற்றிகளை பெற்றுள்ளது.
பல அணிகள் தங்களின் துவக்ககாலத்திலேயே அதிக வெற்றிகளை பெற்றிருந்தாலும், இந்தியாவுக்கு 580 போட்டிகளுக்கு பின்னரே இந்த முக்கிய சாதனை கிடைத்துள்ளது.