ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு..! யார் தெரியுமா?
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ரஜத் படிதார் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, ஷேன் வாட்சன், ராகுல் டிராவிட், விராட் கோலி, டு பிளெசிஸ் ஆகிய கேப்டன்களுக்குப் பிறகு ஆர்சிபி அணியை வழிநடத்தும் வாய்ப்பை ரஜத் படிதார் பெறுகிறார். புதிய கேப்டனுக்கு விராட் கோலி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2013 முதல் 2021 வரை ஆர்சிபி அணியின் கேப்டனாக கோலி செயற்பட்டதுடன், 2022 முதல் 2024 வரை ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இந்த வருடம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக டு பிளெசிஸ் விளையாட உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு அடுத்தபடியாக, 143 போட்டிகளில் அணியை வழிநடத்திய கேப்டன் என்ற சிறப்பை கோலி பெற்றுள்ளார்.
எனினும், இதுவரை ஆர்சிபி அணிக்காக கோலி சிறப்பான சாதனைகளை படைத்திருந்தாலும், அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
ஆர்சிபி அணிக்காக 140 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 68 வெற்றிகளையும், 70 தோல்விகளையும், 4 டிராவையும் கோலி பெற்றுள்ளார்.
2016 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு ஆர்சிபியை அழைத்துச் சென்றதுடன், அந்த சீசனில் 973 ரன்கள் குவித்து இன்று வரை முறியடிக்கப்படாத சாதனையை படைத்துள்ளார்.
அத்துடன், 2024 ஐபிஎல் தொடரில் 154 ஸ்டிரைக் ரேட்டில் 741 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஏற்கனவே ஆர்சிபி அணியின் முக்கிய வீரராக இருந்துள்ள ரஜத் படிதார், சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபியில் மத்தியப் பிரதேச அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர்.
அண்மையில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் மத்திய பிரதேச அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற அவர், 10 போட்டிகளில் 186.08 ஸ்ட்ரைக் ரேட்டில் 428 ரன்கள் குவித்து ரஹானேவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.