ஏமாற்றி வென்றதா சென்னை அணி? பந்தை சேதப்படுத்தியதாக புகார்.. உண்மை இதோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்தை சேதப்படுத்தி போட்டியில் வெற்றி பெற்றதாக வீடியோ ஒன்று வைரல் ஆகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ஞாயிற்றுகிழமை நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததுடன், யாருமே எதிர்பார்க்காத வகையில் சிஎஸ்கே அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய கலீல் அகமத் அபாரமாக பந்து வீசினார்.
கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் நான்காவது பந்திலே ரோகித் சர்மா ஆட்டம் இழந்தார். தென்னாப்பிரிக்க வீரர் ரியான் ரிக்கல்டன், கலில் அகமத் ஓவரில் ஆட்டமிழந்தார்.
மேலும் கலீல் அகமது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தடுமாறினர். பவர் பிளே முடிவிலே மும்பை அணி 52 ரன்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்தை சேதப்படுத்தி போட்டியில் வெற்றி பெற்றதாக வீடியோ ஒன்று வைரல் ஆகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
இதையும் படியுங்கள்: 43 வயதான நிலையில் மீண்டும் விளையாடுவது ஏன்? உண்மையை உடைத்த தோனி
கலீல் அஹமத், பந்து வீச தயாரான போது ருதுராஜ் அவரிடம் ஓடிவந்து ஏதோ கொடுக்க, அதனை வாங்கிய கலீல் அகமத் இரண்டு வினாடிகளில் மீண்டும் அதை ருதுராஜிடமே திரும்பி கொடுக்க ருதுராஜ் மீண்டும் அதனை தனது ஜெர்சி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு சென்று விட்டார்.
இந்த வீடியோவை சுட்டிக்காட்டியுள்ள சிலர், சிஎஸ்கே அணி பந்தை சேதப்படுத்தி வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டி வருகின்றனர். அத்துடன், சிஎஸ்கே அணி ஏமாற்றி வெற்றி பெற்றதால் அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
எனினும், இதற்கு பதிலடி கொடுத்துள்ள சிஎஸ்கே ரசிகர்கள் வாயில் போடும் பபல் கம்மை தான் இருவரும் மாற்றிக்கொண்டனர் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் பந்து சேதப்படுத்தி இருந்தால் அதனை நடுவர்கள் அப்போதே கண்டுபிடித்து இருப்பார்கள் என்றும், இதில் தவறு ஏதும் நிகழவில்லை என்றும் கூறியுள்ளனர்.
எனினும் இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணி எந்த ஒரு புகாரையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.