விளையாட்டில் விராட் கோலியை பின்பற்றுமாறு மகனிடம் சொல்வேன்... பிரையன் லாரா நெகிழ்ச்சி
தொடரின் போதே, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 3 சதங்கள், 6 அரைசதங்கள் என்று 765 ரன்களை விளாசி சாதனை படைத்து தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
அதுமட்டுமல்லாமல் தொடரின் போதே, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.
பேட்டிங்கில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஃபார்மின்றி தவித்து வந்த விராட் கோலி, தற்போது உச்சக்கட்ட ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். இதனால் விராட் கோலியிடம் இன்னும் 3 முதல் 4 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் விளையாடும் திறன் இருப்பதாக முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் சொல்கின்றனர்.
இந்த நிலையில் கொல்கத்தா வந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா விராட் கோலி குறித்து பேசினார்.
அப்போது, உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், விராட் கோலியின் ஆட்டத்தால் என்ன பயன் என்று ரசிகர்கள் பலரும் பேசுகிறார்கள்.
கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு தான். ஆனால் அதில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களும் நம்பர் 1 இடத்தை பிடிக்கவும் விளையாட வேண்டும். அதேபோல் அணியின் வெற்றியை, தனிப்பட்ட வீரரின் வெற்றியாகவும் பார்க்கலாம்.
உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் விராட் கோலியிடம் அதிகம் பிடிப்பது அவரின் ஒழுக்கம் தான்.
ஒவ்வொரு போட்டிக்கும் எப்படி தயாராக வேண்டும், உடல் ரீதியாக, மன ரீதியாக என்று அவரின் ஒழுக்கம் ஆச்சரியமளிக்கிறது. இதன் மூலமாக தான் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் முகமாக மாறியுள்ளார்.
எனக்கு ஒரு மகன் இருக்கிறான். ஒருவேளை என் மகன் எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு விளையாட்டை விளையாட ஆசைப்படுகிறான் என்றால், முதலில் விராட் கோலியின் ஒழுக்கம் பற்றி அர்ப்பணிப்பை தான் பின்பற்ற அறிவுறுத்துவேன். நம்பர் 1 வீரராக வருவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்க்க அறிவுறுத்துவேன் என்று கூறியுள்ளார்.