இந்திய அணி அதிரடி, 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது வங்கதேசம்... இந்திய அணி புதிய ரெக்காட்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் இந்திய அணி வெற்றிப்பெற்று உள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
அத்துடன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் இந்திய அணி வெற்றிப்பெற்று உள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்கவீரர் அபிஷேக் சர்மா 15 ரன்கள், சஞ்சு சாம்சன் 10 ரன்கள், சூரியகுமார் எட்டு ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்.
இந்திய அணி 41 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், இளம் வீரர் நிதிஷ்குமார் அபாரமாக விளையாடி ஏழு சிக்ஸர், நான்கு பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார்.
அத்துடன், ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து ஐந்து பவுண்டரி, மூன்று சிக்சர்கயுடன் 29 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். ஹர்திக் பாண்டியா 19 பந்துகளின் 32 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.
222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணியால் இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியவில்லை.
பர்வேஷ் ஹூசைன் 16 ரன்களிலும் லிட்டன் தாஸ் 14 ரன்களிலும் கேப்டன் நஜ்முல் உசேன் 11 ரன்களிலும் ஆட்டம் இழக்க, மகமுதுல்லா மூன்று சிக்ஸர்களுடன் 39 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார்.
மற்ற வீரர்கள் நிலைக்காத நிலையில், வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. நித்திஷ் குமார் நான்கு ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.