இங்கிலாந்துடனான கடைசி டெஸ்டின் வெற்றி இந்திய அணிக்கு முக்கியம்... ஏன் தெரியுமா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே 3-1 என கைப்பற்றி உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே 3-1 என கைப்பற்றி உள்ளது.
எனினும், மார்ச் 7 முதல் தர்மஷாலாவில் நடைபெற உள்ள கடைசி தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நான்காவது டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா, கடைசி டெஸ்ட் போட்டிக்கு திரும்புகிறார். கே.எல்.ராகுல் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இன்னும் முழு தகுதியை பெறவில்லை என கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்த பின்னர், டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில், இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பிறகு முதலிடத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட இந்திய அணி முன்னேற்றம் அடைந்துள்ளது.
2024ம் ஆண்டின் கடைசி மாதங்களில் நியூசிலாந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை தோற்கடிப்பது இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும்.
இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. இது இந்திய அணிக்கு இன்னும் பெரிய சவாலாக இருக்கும்.
நவம்பர் 2024 முதல் ஜனவரி 2025 வரை ஆஸ்திரேலியாவில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும். இங்கு ஆஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிப்பது எளிதான விஷயம் அல்ல.
இத்தகைய சூழ்நிலையில் இந்திய அணி அனைத்து புள்ளிகளையும் கருத்தில் கொண்டு இனி வரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும்.
எனவே, வரவிருக்கும் சவால்களை மனதில் வைத்து, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025ன் இறுதிப் போட்டிக்கு வரலாம். ஆனால் இறுதிப் போட்டிக்கு இதுவரை இரண்டுமுறை இந்திய அணி தகுதி பெற்றாலும் சிறப்பாக எதையும் செய்யவில்லை.
2021ம் ஆண்டு இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.
2023 நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.