399 ரன்னை குறைந்த ஓவர்களில் சேஸ் செய்வோம்... இந்திய அணிக்கு சவால்விட்ட ஆண்டர்சன்!
எங்களது பேஸ்பால் ஆட்டம் காரணமாக, எத்தனை ரன் அடித்தாலும் போதாது என்பது போலதான் அவர்கள் விளையாடினார்கள்'' எனக் கூறினார்.
இரண்டாவது டெஸ்ட், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு இலக்காக 399 ரன்களை நிர்ணயித்துள்ளனர்.
இலக்கு பெரியது என்றாலும், இங்கிலாந்து அணி எவ்வித அச்சமும் இல்லாமல் பேஸ்பால் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மூன்றாவது நாள் முடிவுவரை இங்கிலாந்து அணி 67/1 ரன்களை அடித்துள்ளது.
பென் டக்கெட் மட்டுமே விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். கடைசி இரண்டு நாளில், இங்கிலாந்து அணி 332 ரன்களை அடித்தால் வெற்றி என்ற நிலைமை இருக்கிறது.
இப்போட்டியில் ஆண்டர்சனின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்களை வீழ்த்தி இவர், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்களை எடுத்தார்.
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணி குழப்பத்தில் விளையாடியதாக கிண்டல் செய்துள்ளார். ''இந்திய அணி பேட்டர்கள் இன்று பதற்றத்துடன் பேட்டிங் செய்வதை கண்டேன். எத்தனை ரன் அடித்தால் போதும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
எங்களது பேஸ்பால் ஆட்டம் காரணமாக, எத்தனை ரன் அடித்தாலும் போதாது என்பது போலதான் அவர்கள் விளையாடினார்கள்'' எனக் கூறினார்.
மேலும் பேசிய ஆண்டர்சன், ''நேற்று எங்களது அணி பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம், எங்களுடன் பேசினார். அப்போது, இந்திய அணி 600 ரன்களை இலக்காக வைத்தாலும் நம்மால் திருப்பி அடிக்க முடியும் எனக் கூறினார்.
அதற்கு காரணம் பேஸ்பால் ஆட்டம்தான். கடந்த இரண்டு வருடங்களாக, நாங்கள் இதனை செய்து வருகிறோம். அதில், பெரிய அளவில் வெற்றிகளை தான் கண்டு வருகிறோம். எங்களது பேஸ்பால் ஆட்டம், எதிரணிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
எதிரணி கேப்டனால் சரியான முடிவுகளை எடுக்க முடியவில்லை. எத்தனை ரன்னை இலக்காக வைக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை'' எனக் கூறினார்.
கடைசி இரண்டு நாட்களில் 332 ரன்களை அடிக்க முடியுமா என ஆண்டர்சனிடம் கேட்டபோது, ''நாங்கள் பேஸ்பால் ஆட்டத்தைதான் விளையாடுவோம். வெற்றி, தோல்வி குறித்து நாங்கள் யோசிப்பது கிடையாது.
எங்களது ஆட்டத்தை தொடர்ந்து ஆடுவோம். இன்னமும் 180 ஓவர்கள் எஞ்சியிருக்கிறது. இதில், 60 அல்லது 70 ஓவர்களிலேயே 332 ரன்களை அடித்து, வெற்றியைப் பெறுவோம். இதனை நிச்சயம் செய்வோம்'' என ஆண்டர்சன் அதிரடியாக பேசியுள்ளார். இதனால், இன்றைய ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.