ஒரே தொடரில் 26 விக்கெட்டுகள்...  33 ஆண்டுகளுக்கு பின்னர் கபில் தேவ் சாதனையை முடித்த பும்ரா!

1991-92ல் நடந்த டெஸ்ட் தொடரில் கபில் தேவ் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

ஒரே தொடரில் 26 விக்கெட்டுகள்...  33 ஆண்டுகளுக்கு பின்னர் கபில் தேவ் சாதனையை முடித்த பும்ரா!

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதி வரும் டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரிட் பும்ரா செய்துள்ளார்.

1991-92ல் நடந்த டெஸ்ட் தொடரில் கபில் தேவ் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களை சேர்த்திருந்தது. 

இந்த நிலையில் 4வது நாள் ஆட்டத்தை நிதிஷ் குமார் ரெட்டி - சிராஜ் கூட்டணி தொடங்கியது. அதிரடியாக ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 369 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதன்பின் ஆஸ்திரேலியா அணி 105 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. கான்ஸ்டாஸ் - கவாஜா கூட்டணி இருவரும் தொடக்கம் கொடுத்தனர்.  இந்த சூழலில், பும்ரா வீசிய இன்ஸ்விங்கர் பந்து கான்ஸ்டாஸின் மிடில் ஸ்டம்பை தூக்கி சென்றது. இதனால் அவர் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக 33 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரிட் பும்ரா மட்டும் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளதுடன், இதற்கு முன்பாக 1991-92ல் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கபில் தேவ் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. 

இந்த சாதனையை முறியடித்து, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 34 போட்டிகளில் விளையாடியுள்ள ஜஸ்பிரிட் பும்ரா, மொத்தமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துள்ளார். 

இந்தப் பட்டியலில் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 195 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும் சமன் செய்துள்ளார்.

2019-21 சீசனில் ரவிச்சந்திரன் அஸ்வின் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்து வந்தது. தற்போது 2023-25 சீசனில் பும்ரா 71 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் வீரர் நேதன் லயன் 2021-23 சீசனில் 88 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp