ஓட்டைகளை அடைத்து வருகிறோம்... தோல்விக்கு இதுதான் காரணம்... அடுத்த சீசனுக்கு அணியை தயார் செய்கிறேன்! தோனி சோகம்!
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு காரணம் சராசரிக்கும் குறைவான ஸ்கோரை எடுத்ததே என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு காரணம் சராசரிக்கும் குறைவான ஸ்கோரை எடுத்ததே என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.
அத்துடன், அடுத்து விளையாடவுள்ள 6 போட்டிகளில் வெற்றிப்பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முயற்சிப்போம், வெற்றி பெறவில்லை என்றால், அடுத்த சீசனுக்கான அணியை கட்டமைக்க ஆரம்பிப்போம் என்றார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. முதலில் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை மட்டுமே சேர்த்தது.
பின்னர், களமிறங்கிய மும்பை அணி 15.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்து வெற்றிப்பெற்றது. இந்த தோல்வியுடன் சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலேயே உள்ளது.
இங்கிருந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், சிஎஸ்கே அணி அடுத்து விளையாடவுள்ள 6 போட்டிகளிலும் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தெரிவிக்கையில், நாங்கள் சராசரிக்கும் குறைந்த ரன்களையே சேர்த்திருந்தோம். உலகில் இன்று மிகச்சிறந்த டெத் பவுலராக பும்ரா இருக்கிறார். மும்பை அணி டெத் பவுலிங்கை கொஞ்சம் விரைவாகவே தொடங்கிவிட்டது.
சிஎஸ்கே அணி விரைவாக ரன்களை சேர்க்க தவறிவிட்டது. மிடில் ஓவர்களில் இன்னும் ரன்களை சேர்த்திருக்க வேண்டும். ஆயுஷ் மாத்ரே கொடுத்த தாக்கத்தை அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்திருக்க வேண்டும்.
மும்பை அணி வீரர்கள் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொண்டார்கள். நாங்கள் அதிக சிக்சர்களை விட்டுக் கொடுத்தால், ஆட்டம் நம் கைகளில் இருக்காது.
அடுத்தடுத்து வரும் போட்டிகளில் சரியாக ஆடுகிறோமா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். சில கேட்ச்கள் பிடித்திருந்தால், முடிவுகள் மாறி இருக்கும். தற்போது சிஎஸ்கே அணியில் உள்ள ஓட்டைகளை அடைத்து வருகிறோம்.
அடுத்து வரும் 6 போட்டிகளில் வெற்றிப்பெற முயற்சிப்போம். முடியவில்லை என்றால், அடுத்த சீசனுக்கான பிளேயிங் லெவனை கட்டமைக்க தயார் ஆவோம் என்று தெரிவித்துள்ளார்.