சிஎஸ்கே அணி இப்படி மோசமாக நடந்ததே இல்லை.. வருத்தத்தில் ரசிகர்கள்!
சிஎஸ்கே அணியின் பேட்டிங் மிக சராசரியாக இருந்ததுடன், மிடில் ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் மோசமான சாதனையை சிஎஸ்கே செய்தது.
14 ஆண்டுகளில் முதன் முறையாக ஒரு மோசமான பேட்டிங் சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்து உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் மிக சராசரியாக இருந்ததுடன், மிடில் ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் மோசமான சாதனையை சிஎஸ்கே செய்தது.
முதல் ஆறு ஓவர்களில் அதிரடியாக விளையாடிய சிஎஸ்கே அணி, 15வது ஓவர் வரை டெஸ்ட் போட்டி போல ரன் சேர்த்தது.
துவக்க வீரர்கள் ரஹானே - ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து முதல் ஆறு ஓவர்களில் 55 ரன்கள் குவித்தனர். ஆறாவது ஓவரின் கடைசி மூன்று பந்திலும் ரஹானே பவுண்டரிகளை விளாசினார்.
ஆனால், ஹர்ப்ரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் பந்து வீசத் துவங்கிய பின் அவர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ரஹானே 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிவம் துபே ரன்கள் இன்றியும் ரவீந்திர ஜடேஜா 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் ருதுராஜ் கெய்க்வாட், சமீர் ரிஸ்வி இணைந்து15வது ஓவர் முடியும் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இதை அடுத்து மிடில் ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட எடுக்காத அணிகளின் பட்டியலில் நான்காவதாக சிஎஸ்கே இணைந்தது.
ஐபிஎல் தொடரில் இதற்கு முன்னர் புனே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய மூன்று அணிகள் மட்டுமே இந்த மோசமான சாதனையை செய்து இருந்தன.
2024 ஐபிஎல் தொடரில் 200 ரன்கள் என்பது சாதாரணமான ஸ்கோர் ஆகி விட்ட நிலையில் மிடில் ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் சிஎஸ்கே அணி ஆடியமை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.