ஐபிஎல் தொடர்பில் வருகிறது முக்கிய விதி மாற்றம்.. முகமது ஷமி கோரிக்கை... பிசிசிஐ அதிரடி!
பந்தின் மீது எச்சிலை வைத்து தேய்க்கும் போது ஒரு புறம் அது லேசாக தேய்ந்து போகும். அப்போது பந்து நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்.

2025 ஐபிஎல் தொடரில் முக்கிய விதி மாற்றம் ஒன்றைக் கொண்டு வருவது பற்றி பிசிசிஐ ஆலோசனை நடத்த உள்ளது.
கேப்டன்கள் கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. அதுவும் முகமது ஷமி கேட்டுக்கொண்டதற்காக இந்த விதி மாற்றம் அமல்படுத்தப்பட உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது பேட்டி அளித்த முகமது ஷமி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்தின் மீது எச்சிலைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என கோரி இருந்தார்.
பந்தின் மீது எச்சிலை வைத்து தேய்க்கும் போது ஒரு புறம் அது லேசாக தேய்ந்து போகும். அப்போது பந்து நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். எனினும், கொரோனாவுக்கு பின்னர் எச்சிலைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதியால் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே அழிந்து வருகிறது.
சர்வதேச கிரிக்கெட் அமைப்பு இது குறித்து மௌனம் காத்து வரும் நிலையில் பிசிசிஐ அதிரடி முடிவை எடுத்து உள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் இந்த தடையை நீக்கினால் சர்வதேச கிரிக்கெட்டிலும் அது அமலுக்கு வரும். எனவே, இந்த தடையை நடப்பு ஐபிஎல் தொடரில் நீக்குவதற்கான முயற்சியை எடுக்க உள்ளது பிசிசிஐ.
முதல் கட்டமாக இன்று நடக்க உள்ள ஐபிஎல் கேப்டன்கள் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுவதுடன், பெரும்பாலான கேப்டன்கள் இதற்கு ஆதரவாக பேசினால் இந்தத் தடையை நடப்பு ஐபிஎல் தொடரிலேயே நீக்கப்படும்.
எனினும், மார்ச் 22 முதல் 2025 ஐபிஎல் தொடர் துவங்க உள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் தடையை நீக்க முடியுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
எனினும், இது சாதாரண ஒரு விதி மாற்றம் என்பதால் இதை இரண்டு நாட்களுக்குள் அமல்படுத்தி விட முடியும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.