நாடு திரும்பிய ருதுராஜ், சாய் சுதர்சன்.. தமிழக ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விலகி இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்தியா ஏ அணி மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், நட்சத்திர வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்சன் உள்ளிட்டோர் நாடு திரும்ப உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் வரும் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் ஆரம்பமாக உள்ளதுடன், முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விலகி இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனால் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரிட் பும்ரா பொறுப்பை ஏற்கவுள்ள நிலையில், இந்தியா ஏ அணி வீரர்களுடன் இணைந்து இந்திய அணி வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வந்தனர்.
இந்த பயிற்சியின் போது இந்திய அணியின் சீனியர் வீரர்களான கேஎல் ராகுல், சுப்மன் கில் உள்ளிட்டோர் காயமடைந்த நிலையில், சுப்மன் கில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்றே கூறப்படுகின்றது.
இதனால் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரையும் இந்திய அணியில் இணைக்க தீர்மானம் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், இந்திய வீரர்களுடனான பயிற்சி ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக செயல்பட்டதால், அவரையும் ஆஸ்திரேலியாவில் தங்க வைக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், இந்தியா ஏ அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்ப தொடங்கியுள்ளனர்.
அத்துடன், விமானம் ஏறுவதற்காக ருதுராஜ் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் பேருந்தில் ஏறிய வீடியோ வெளியாகியுள்ளதால் தமிழக ரசிகர்கள் சோகமடைந்து உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று நீண்ட நாட்களாக போராடி வரும் ருதுராஜ் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் அதற்கான வாய்ப்பு ஆஸ்திரேலியா மண்ணில் இருந்த நிலையில், திடீரென நாடு திரும்புவதால் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.