திடீரென ஓய்வை அறிவித்த அஸ்வின்... கோலி நெகிழ்சி.. என்ன நடந்தது?
பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் அமர்ந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். பின்னர் ரோஹித் சர்மாவை கட்டி அணைத்து விடை பெற்றார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்த நிலையில், அவரை விராட் கோலி கட்டி அணைத்து நீண்ட நேரம் பேசியமை கிரிக்கெட் உலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் ஓய்வறையில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வினை கட்டியணைத்து அவருடன் நின்று நீண்ட நேரம் பேசினார்.
அதன் பின்னர் தோள்களில் கை போட்டு அமர்ந்திருந்தார். அடுத்து அஸ்வின், ஜடேஜாவை சந்தித்து தனது ஓய்வு முடிவை கூறினார். ஜடேஜா மற்றும் அஸ்வின் இணை பிரியாமல் பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருந்த நிலையில் அவரும் இந்த செய்தியால் சோகமானார்.
அதன் பின் ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சு ஜாம்பவான் நாதன் லியோனை சந்தித்து தனது ஓய்வு முடிவை கூறினார் அஸ்வின். நாதன் லியோன் மற்றும் அஸ்வின் இடையே டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்துவதில் போட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பலமுறை நாதன் லியோன் அஸ்வினை பாராட்டி பேசி இருக்கிறார். அஸ்வின் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்து இருப்பதாகவும் கூட அவர் குறிப்பிட்டு இருந்தார். பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் அமர்ந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
பின்னர் ரோஹித் சர்மாவை கட்டி அணைத்து விடை பெற்றார். அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்கள் மற்றும் 3503 ரன்கள் குவித்துள்ளார். 37 முறை ஐந்து விக்கெட் ஹால் சாதனையை செய்துள்ளார். 6 டெஸ்ட் சதங்கள் அடித்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அஸ்வினுக்கு தற்போது 38 வயதாகிறது, வயது காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
செய்தியாளர் சந்திப்பில், “ஒரு கிரிக்கெட் வீரராக என்னிடம் இன்னும் நிறைய இருக்கிறது. உள்நாட்டு மற்றும் கிளப் அளவிலான கிரிக்கெட்டில் இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன், ஆனால் இது சர்வதேச அளவில் எனது கடைசி நாள் என்று அஷ்வின் தெரிவித்துள்ளார்.
அஸ்வின் ஓய்வுக்குப் பிறகு அவருக்கு பதிலாக யார் என்பதுதான் இந்திய அணி நிர்வாகத்தின் கடினமான கேள்வி. சென்னையைச் சேர்ந்த அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியில் தற்போது மிகக் குறைவான முழு நேர ஆப் ஸ்பின்னர்களே இருப்பதால், இப்போது ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் மீது அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.