பிசிசிஐயில் இருந்து வெளியேறும் ஜெய் ஷா.. செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வாரிசுகள்!
டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கும் ரோஹன் ஜெட்லிக்கு பிசிசிஐ செயலாளர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு தேர்வாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர், குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டால், காலியாகும் பிசிசிஐ செயலாளர் பதவிக்கு அடுத்து வரப் போவது யார் என்ற கேள்வி தற்போது ஏற்பட்டுள்ளது.
கடந்த சில காலங்களாக ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே இந்திய கிரிக்கெட்டை நிர்வகித்து வரும் நிலையில், பாஜகவின் முக்கிய தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராக கடந்த ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார்.
தற்போது அவர் பிசிசிஐ-யை விட்டு வெளியேறும் பட்சத்தில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி அந்த பதவிக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கும் ரோஹன் ஜெட்லிக்கு பிசிசிஐ செயலாளர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
அத்துடன், முன்னாள் பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் மகன் அவிஷேக் டால்மியா-வுக்கும் பிசிசிஐ செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பிசிசிஐ-யை பொறுத்தவரை தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளே முக்கிய பதவிகளாக உள்ள நிலையில், தற்போது பிசிசிஐ தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி செயல்பட்டு வருகிறார்.
அவரது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் ஒரு வருடம் உள்ளதுடன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக 36 வயதாகும் ஜெய் ஷா நியமிக்கப்பட்டால் இளம் வயதில் தலைவர் பதவியை பிடித்து சாதனை செய்வார்.
மேலும், ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என் ஸ்ரீனிவாசன், ஷஷான்க் மனோகர் ஆகியோர் வரிசையில் ஐசிசி தலைவராக இருந்த ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையையும் அவருக்கு கிடைக்கும்.